வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர் போராட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு அவர் பொறுப்பு என்று கூறி இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஹசீனாவை வங்கதேசம் ஒப்படைக்கக் கோரியுள்ளது. ஆனால் இந்தத் தீர்ப்பில் பல சட்டக் கேள்விகள் எழுந்துள்ளன.
கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இது பெரும் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். இதனால் ஷேக் ஹசீனா பதவியை இழந்து இந்தியாவுக்கு தப்பி வந்தார். அதன் பிறகு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
இந்தப் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறி, இடைக்கால அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. அதன் அடிப்படையில் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸமான் கான், முன்னாள் போலீஸ் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் ஆகியோர் மீது “மனித குலத்துக்கு எதிரான குற்றம்” என்ற பிரிவில் வழக்கு தொடரப்பட்டது. நவம்பர் 18 அன்று தீர்ப்பாயம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது.
இதையும் படிங்க: மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசினாவை ஒப்படையுங்கள்!! அழுத்தம் தரும் வங்கதேசம்!! இந்தியா நச் பதில்!

இந்தத் தீர்ப்பை ஹசீனாவின் அவாமி லீக் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. “இது கட்டைப் பஞ்சாயத்து, அரசியல் பழிவாங்கல்” என்று கூறி போராட்டங்கள் நடத்துகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் அவாமி லீக் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மரண தண்டனை உடனே அமலாகாது. ஹசீனா 30 நாட்களுக்குள் வங்கதேச உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டில் தண்டனை உறுதியானாலும், வங்கதேச அதிபர் அதை ரத்து செய்யவோ குறைக்கவோ அதிகாரம் உள்ளது.
வங்கதேச இடைக்கால அரசு, ஹசீனாவை இந்தியா ஒப்படைக்க வேண்டும் என்று கோரியுள்ளது. 2013-ல் இரு நாடுகளுக்கும் இடையே நாடு கடத்தல் ஒப்பந்தம் உள்ளது. ஆனால் அரசியல் குற்றச்சாட்டு என்றால் இந்தியா மறுக்கலாம். இதுவரை இந்தியா எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்தத் தீர்ப்பாயத்தின் சட்டப்பூர்வத்தன்மையும் கேள்விக்குள்ளாகியுள்ளது. இந்த ICT தீர்ப்பாயம் 1973-ல் 1971 விடுதலைப் போர்க் குற்றங்களை விசாரிக்க அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது 2024 போராட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹசீனா அல்லது அவரது வழக்கறிஞர்கள் விசாரணையில் கலந்து கொள்ளவில்லை. எனவே “நியாயமான விசாரணை நடக்கவில்லை” என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இந்தத் தீர்ப்பால் வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அவாமி லீக் ஆதரவாளர்கள் மீது “கண்டதும் சுட” உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் இந்த விவகாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதையும் படிங்க: மனித குலத்திற்கு எதிரான குற்றம்! இன்று தீர்ப்பு! வேற வழியில்லை!! ஷேக் ஹசீனா உருக்கம்!