எலக்ட்ரானிக் சிட்டி என்று அழைக்கப்படும் பெங்களூரின் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக, கர்நாடக மாநில அரசு வெளி வட்டச்சாலையில் (அவுட்டர் ரிங் ரோடு) 'கன்ஜெஷன் பிரைசிங்' எனும் நெரிசல் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், நகரின் மிகவும் பரபரப்பான இந்த 60 கி.மீ. நீளமுள்ள சாலையில் உச்ச நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து தடைகளைக் குறைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சுமையாக இருக்கும் என விமர்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாநில அரசின் தலைமை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பயோகான் நிறுவன தலைவர் கிரண் மசூம்தர் ஷா உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், சமூக ஆர்வலர் ஆர்.கே.மிஸ்ரா, உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அரசு, 90 நாட்கள் செயல் திட்டத்தை வெளியிட்டது. இதில், சாலை பள்ளங்கள், கழிவு மேலாண்மை, முடிவடையாத பணிகள் போன்றவற்றுக்கு தீர்வு காண்பதோடு, ORR-இல் கன்ஜெஷன் பிரைசிங் அறிமுகப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பாவம் அவருக்கு அரசியல் தெரியல... EPS குறித்து செல்வப் பெருந்தகை விமர்சனம்...!
"அவுட்டர் ரிங் ரோடு, IT நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களின் மையமாக இருப்பதால், இங்கு நெரிசல் 24 மணி நேரமும் நீடிக்கிறது. கட்டணம் வசூலிப்பால் வாகனங்கள் குறையும்; சாலை பராமரிப்புக்கும் நிதி கிடைக்கும்" என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்தின்படி, உச்ச நேரங்களான காலை 7-11 மணி முதல் மாலை 5-9 மணி வரை, தனியார் வாகனங்களுக்கு கி.மீ. ஒன்றுக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம். பஸ், ஆட்டோ போன்ற பொது வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
லண்டன், சிங்கப்பூர் நகரங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட இந்த முறை, பெங்களூரில் FASTag தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படும். அரசு, 400 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் அவுட்டர் ரிங் ரோட்டை மேம்படுத்தும் திட்டத்தையும் இணைத்துள்ளது. இதில், 22.7 கி.மீ. பகுதியில் வெள்ளை அடுக்குச் சாலை (வைட்-டாப்பிங்) பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால், இந்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து சங்கங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"ஏற்கனவே உயர் எரிபொருள் விலை, போக்குவரத்து கட்டண உயர்வு போதாதா? இது ஏழைகளை வெளியேற்றும்" என பெங்களூரு போக்குவரத்து சங்கத் தலைவர் ராஜேஷ் குமார் கண்டனம் தெரிவித்தார். சமீபத்தில், பிளாக்பக் நிறுவனம் ORR-இருந்து அலுவலகத்தை நகர்த்தியது போன்று, பல IT நிறுவனங்கள் இதை காரணமாகக் காட்டி விமர்சித்துள்ளன. சமூக வலைதளங்களில் #NoTollOnORR என்ற ஹேஷ்டேக் பிரபலமாகியுள்ளது.

முதலமைச்சர் சித்தராமையா, "மக்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டு, சாலை பள்ளங்கள் குறித்து அதிகாரிகளை எச்சரித்துள்ளேன். 90 நாட்களுக்குள் முழு முன்னேற்றம் ஏற்படும்" எனத் தெரிவித்தார். அரசு, பொதுமக்கள் கருத்துக்களை கேட்டு திட்டத்தை இறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, பெங்களூரின் போக்குவரத்து கலாச்சாரம் மாற்றம் அடையுமா என்பது காலம் தான் சொல்லும்.
இதையும் படிங்க: கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு திடீர் தடை! காலை வாரிய ரஷ்யா! இந்தியா கதி?!