அதிமுகவிற்கு இனி எவ்வித எதிர்காலமும் இல்லை, அக்கட்சிக்குப் புற்றுநோய் வந்துவிட்டது" என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனரும், அதிமுக முன்னாள் நிர்வாகியுமான பெங்களூரு வ.புகழேந்தி, தான் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலக அறையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான என்.ஆனந்தை, பெங்களூரு புகழேந்தி இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பிற்குப் பிறகு தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் வகையிலான பல்வேறு அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அமைச்சர் என்.ஆனந்த் அவர்களை இன்று நான் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தேன். நான் விரைவில் அதிகாரப்பூர்வமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளேன். தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களின் முகத்தில் எங்களது பழைய தலைவர்களின் முகவரியையும் ஆளுமையையும் எங்களால் பார்க்க முடிகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அந்த இயக்கத்தை முற்றிலும் அழித்துவிட்டார்.
இதையும் படிங்க: இபிஎஸ் மீது அதிருப்தி - தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள்!
இப்போது இருக்கும் அதிமுகவிற்குப் புற்றுநோய் முற்றிய நிலை வந்துவிட்டது. பெரும்பாலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் தன்னிச்சையான தலைமையைத் துளியும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் காரணமாக, இன்னும் சில அதிமுக எம்.எல்.ஏக்கள் தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் ஆளுமைமிக்க தலைமையை ஏற்று, விரைவில் தவெகவில் இணைய உள்ளனர்" என்று அதிரடி குண்டுகளை வீசினார். அடுத்தடுத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாற்றுக்கட்சித் தலைவர்கள் தவெக கூடாரத்தை நோக்கி நகர்ந்து வருவது, தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வட்டாரத்தில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: துரோகி சத்தியபாமா! தவெக-வில் இணைந்த தாராபுரம் எம்.எல்.ஏ-வுக்கு எதிராக அ.தி.மு.க தொண்டர்கள் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்!