பாட்னா: நேபாளத்தில் கோசி மற்றும் கண்டக் ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் தாக்கம் பீகார் மாநிலத்திலும் எதிரொலித்துள்ளது. வெள்ளநீருடன் பீகாருக்குள் அடித்து வரப்பட்ட மீன்களை பொதுமக்கள் வாங்கவோ, விற்கவோ, சமைத்து சாப்பிடவோ வேண்டாம் என்று மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேபாள எல்லையை ஒட்டியுள்ள பீகாரின் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்று நீரின் தரம் தொடர்பாகவும் கவலை எழுந்துள்ளது. மேற்கு சம்பாரன், கிழக்கு சம்பாரன், சீதாமர்ஹி, கிஷன்கஞ்ச், பூர்ணியா, அராரியா உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரில் பாதுகாப்பான அளவை விட அதிகமாக ஆர்சனிக் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கங்கை நதியை ஒட்டிய சில மாவட்டங்களிலும் ஆர்சனிக் அளவு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், நேபாள எல்லையை ஒட்டிய ஏழு மாவட்டங்களில் ஆற்று நீரில் அதிகளவு இரும்புச்சத்து கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தண்ணீரில் துவர்ப்புச் சுவை ஏற்படுவதுடன், பாத்திரங்கள் மற்றும் துணிகளில் சிவப்பு, மஞ்சள் நிறக் கறைகள் படிவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம்! இந்தியாவுக்கும் காத்திருக்கும் அடுத்த ஆபத்து! பீகார், உ.பி.க்கு எச்சரிக்கை!
இந்த சூழலில், வெள்ளநீரில் பிடிக்கப்படும் மீன்களில் கழிவுநீர் மாசுபாடு, பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும் என பீகார் விலங்கு மற்றும் மீன்வளத்துறை எச்சரித்துள்ளது. வெள்ளத்தால் மாசடைந்த நீர்நிலைகளில் இறந்த விலங்குகள் மற்றும் பல்வேறு கழிவுகள் கலந்திருப்பதால், அந்த நீரில் பிடிக்கப்படும் மீன்கள் உணவுக்கு பாதுகாப்பானவை அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வெள்ளப்பகுதிகளில் புதிதாகக் காணப்படும் சில வகை மீன்களை சாப்பிட்டவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நிலைமை சீராகும் வரை வெள்ளநீரில் பிடிக்கப்படும் மீன்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெள்ளநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் பெருகி டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தோல் மற்றும் கண் தொற்றுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், வெள்ளநீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளதால் பீகாரின் எல்லையோர மாவட்டங்களில் தானியங்கள் மற்றும் காய்கறி உற்பத்தியும் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளம் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு, குடிநீர் மற்றும் உணவுப் பாதுகாப்பு வரை நீண்டுள்ளது.
இதையும் படிங்க: நிதி வேண்டாம்! நீதி வேண்டும்! இழப்பீடு கொடுங்கள்! இந்தியா, சீனாவை நோக்கி நேபாளம் வைத்த குற்றச்சாட்டு!