கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சி (இருசக்கர வாகன டாக்சி) சேவைகளுக்கு அம்மாநில அரசு விதித்திருந்த தடையை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்து முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் Ola, Uber, Rapido உள்ளிட்ட ஆப் அடிப்படையிலான பைக் டாக்சி நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் சேவைகளை மீண்டும் தொடங்க வழிவகை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி, தனி நீதிபதி பி. ஷியாம் பிரசாத் தலைமையிலான அமர்வு, பைக் டாக்சி சேவைகளை முழுமையாக நிறுத்த உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, 2025 ஜூன் 16-ஆம் தேதி கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டு, அனைத்து ஆப் அடிப்படையிலான இருசக்கர டாக்சி சேவைகளையும் தடை செய்தது. இதனால் Rapido, Ola, Uber போன்ற நிறுவனங்கள் சேவைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்கள் உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் இத்தடையை வரவேற்றனர். இந்தத் தடைக்கு எதிராக பைக் டாக்சி ஆபரேட்டர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி நாகரத்னா மற்றும் நீதிபதி எம்.ஜி.எஸ்.கமல் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: கர்நாடக கொடியை அகற்றச் சொல்லி தாக்குதல்...! இந்தக் கோபம் திராவிட கட்சிகள் மேல வரணும்... சீமான் கண்டனம்..!
விரிவான வாதங்கள் நடைபெற்ற பின்னர், நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றம் தனது உத்தரவில், முந்தைய தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து, பைக் டாக்சி சேவைகளுக்கு தடை விதிக்க முடியாது என தெளிவுபடுத்தியது. மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர வாகனங்களை 'ஒப்பந்த வாகனங்கள்' (contract carriage) என பதிவு செய்ய அனுமதி அளித்தது. மேலும், சேவைகளைத் தொடங்குவதற்கு தேவையான உரிமங்கள் மற்றும் அனுமதிகளைப் பெறுமாறு ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டது. மாநில அரசு இத்தகைய விண்ணப்பங்களை பரிசீலித்து உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டது.
இத்தீர்ப்பு பைக் டாக்சி நிறுவனங்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. Rapido, Ola, Uber போன்றவை விரைவில் சேவைகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளன. இருப்பினும், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தனியார் போக்குவரத்து சங்கங்கள் இத்தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்கள் பைக் டாக்சி சேவைகளை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரி போராட்டங்களை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உத்தரவு பெங்களூரு போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், குறைந்த கட்டணத்தில் விரைவான பயணத்தை வழங்கவும் உதவும் என பயனர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால், சாலை பாதுகாப்பு, ஓட்டுநர் பயிற்சி, காப்பீடு போன்றவற்றில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இத்தீர்ப்பு கர்நாடகாவில் பைக் டாக்சி சேவைக்கு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. மாநில அரசு விரைவில் வழிகாட்டுதல்களை வெளியிட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: ரயிலில் இருந்து மாயமான புதுப்பெண்.. தேடிப்போன போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!