தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை, டெல்லியில் உள்ள அக்கட்சியின் தேசியத் தலைமை உடனடியாக அங்கு வருமாறு அவசர அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் திடீர் அரசியல் நகர்வு தற்பொழுது தமிழக மற்றும் தேசிய அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும், அடுக்கடுக்கான ஊகங்களையும் கிளப்பியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் அதற்குப் பிந்தைய அரசியல் சூழல்கள் குறித்து விவாதிக்கவே இந்த அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சித் தலைமையின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்றே டெல்லிக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

டெல்லி சென்றடையும் அவர், இன்றிரவே பாஜக-வின் தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்துப் பேச உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் நிலவும் தற்போதைய உள்கட்சி விவகாரங்கள், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட மறுசீரமைப்புப் பணிகள் குறித்து அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசியல் களம் தவெக, திமுக, அதிமுக எனப் பல்வேறு வார்த்தைப் போர்களால் சூடேறியுள்ள நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு டெல்லி மேலிடம் விடுத்துள்ள இந்த அவசர அழைப்பு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 2 நாட்களில் அனைத்து கேள்விகளுக்கும் பதில்! பாஜவிலிருந்து ராஜினாமா செய்கிறாரா அண்ணாமலை?
இதையும் படிங்க: அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வினோஜ் பி. செல்வம்!