டெல்லி: பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பி.க்கள் அமளி செய்ததால், சபை நடவடிக்கைகள் முடங்கின.
இந்நிலையில், லோக்சபாவில் நாளை (டிசம்பர் 9, செவ்வாய்க்கிழமை) SIR தொடர்பான 10 மணி நேர விவாதம் நடைபெற உள்ளது. இதை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைக்கிறார். புதன்கிழமை காலை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளிக்கிறார்.
SIR விவாதத்திற்கு முன்னதாகவே, நாளை காலை 9:30 மணிக்கு நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ள ஜி.எம்.சி. பாலயோகி ஆடிட்டோரியத்தில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி எம்பி.க்களின் கூட்டம் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: இன்னைக்கு மோடி! நாளைக்கு ராகுல்காந்தி!! லோக்சபாவில் விவாதம் துவக்கி வைப்பு!! கவுன்டவுன் ஸ்டார்ட்!
இதில் பாஜக, என்டிஏ கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அனைத்து எம்பி.க்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று பாஜக பாராளுமன்றக் கட்சி அலுவலகம் அறிவித்துள்ளது. கூட்டத்தில் SIR விவாதத்திற்கான உத்திகள், அரசின் நிலைப்பாடு, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் தயாரிப்பு போன்றவை விவாதிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
SIR (Special Intensive Revision) என்பது தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி. இதில் போலி வாக்காளர்களை நீக்குவது, புதியவர்களை சேர்ப்பது, இடம்பெயர்ந்தவர்களை கண்டறிவது போன்றவை நடக்கின்றன.

எதிர்க்கட்சிகள் “SIR மூலம் பாஜக ஆதரவாளர்கள் மட்டும் வாக்காளர்களாக சேர்க்கப்படுகிறார்கள், எதிர்க்கட்சி வாக்காளர்கள் நீக்கப்படுகிறார்கள்” என்று குற்றம் சாட்டி அமளி செய்தன. கடந்த ஒரு வாரமாக இதனால் பல முக்கிய மசோதாக்கள் விவாதம் தள்ளியது. இப்போது விவாதம் ஒப்புக்கொள்ளப்பட்டதால், நாளை லோக்சபா அனல் பறக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தரப்பில் கே.சி. வேணுகோபால், மணீஷ் திவாரி, வர்ஷா கெய்க்வாட், முகமது ஜவைத், உஜ்வல் ராமன் சிங், இஷா கான் செளத்ரி, மல்லு ரவி, இம்ரான் மசூத், கோவல் படவி, ஜோதிமணி உள்ளிட்ட 10 எம்பி.க்கள் பேசுகின்றனர்.
ராகுல் காந்தி, “மகாராஷ்டிரம், ஹரியாணா, கர்நாடகா தேர்தல்களில் நடந்த ‘வாக்குத் திருட்டு’, SIR பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் பலி, போலி வாக்காளர்கள் சேர்க்கை” போன்ற குற்றச்சாட்டுகளை எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஓராண்டாக ராகுல் இந்த விவகாரத்தில் தரவுகளுடன் குற்றம் சாட்டி வருகிறார்
பாஜக தரப்பில், SIR “வாக்காளர் பட்டியலை சுத்தம் செய்வதற்கான முக்கியப் பணி” என்று வலியுறுத்துகிறது. நாளை காலை பாஜக-கூட்டணி கூட்டத்தில் இதற்கான உத்திகள் விவாதிக்கப்படும். இந்த விவாதம், 2026-27 மாநிலத் தேர்தல்களுக்கு முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இன்னைக்கு மோடி! நாளைக்கு ராகுல்காந்தி!! லோக்சபாவில் விவாதம் துவக்கி வைப்பு!! கவுன்டவுன் ஸ்டார்ட்!