சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று காலை சென்னையில் வெளியிடப்படுகிறது. மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா இன்று (ஏப்ரல் 14) காலை 11.30 மணிக்கு இந்த அறிக்கையை வெளியிட உள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு செல்ல தீவிரமாக உள்ளன.
அதிமுக மார்ச் 24ஆம் தேதி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் 297 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பிரிட்ஜ் வழங்குதல் உள்ளிட்ட வசதிகள் மற்றும் அனைத்து குடும்பங்களுக்கும் 10,000 ரூபாய் உதவித் தொகை அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகளிர் ஓட்டுக்கு குறி!! மாற்றி யோசிக்கும் திமுக! 25 பெண் வேட்பாளர்ககளை களமிறக்க திட்டம்!
திமுக மார்ச் 29ஆம் தேதி தனது அறிக்கையை வெளியிட்டது. 498 வாக்குறுதிகள் கொண்ட இந்த அறிக்கையில், இல்லத்தரசிகளுக்கு வாஷிங் மிஷின், மிக்ஸி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க 8,000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

காங்கிரஸ் கட்சியும் ஏற்கனவே தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்டது. ஆனால், பாஜக இதுவரை வெளியிடவில்லை. தமிழக பாஜகவில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஜனவரி 18ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்தக் குழு பொதுமக்களிடம் கருத்து கேட்டு, கடந்த மாதம் மாநிலத் தலைமையிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்நிலையில், இன்று நட்டா அவர்கள் தலைமையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. வாக்குறுதிகளில் பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளை கவரும் வகையில் பல முக்கிய திட்டங்கள் இடம்பெறும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகள் மீது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளதால், பல்வேறு தரப்பினரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். பாஜக இந்த அறிக்கையின் மூலம் தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய திட்டங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், அனைத்து கட்சிகளின் வாக்குறுதிகளும் மக்களின் வாக்குகளை பாதிக்கும் என்பது உறுதி.
இதையும் படிங்க: அசைவ சாப்பாடு ரூ.350ஆ!! 2 இட்லி ரூ.40ஆ! தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து பதறும் கட்சி நிர்வாகிகள்!