தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை அருகே பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சித் தலைவர் விஜய் கொடியேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்திய பின்னர், கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் தயாரிப்புகள் குறித்து விவாதித்தார். இதன்போது, அவர் ஆற்றிய உரையில் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
திமுகவை "தீய சக்தி", "டப்பா இஞ்சின்", "துருப்பிடித்த வியூகம்" போன்ற சொற்களால் தாக்கினார். எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆட்சிகளை ஒப்பிட்டு, எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி காலங்களை நினைவுகூர்ந்து திமுகவின் செயல்பாடுகளை கேலி செய்தார். "பவள விழா பாப்பா", "பழைய டப்பா" போன்ற வார்த்தைகளால் திமுகவை கிண்டல் செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

கடந்த சில நாட்களாக அதிமுக குறித்து எந்த விமர்சனமும் முன்வைக்காத நிலையில், இன்றைய உரையில் அதிமுகவை நேரடியாக பெயரிட்டு குறிப்பிடாமல், ஆனால் தெளிவாக குறிவைத்து விமர்சித்தது கவனத்தை ஈர்த்தது. 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தை விவரிக்கும்போது, "மும்முனை போட்டி, நான்கு முனை போட்டி என்று பேசுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அப்படியே இருக்கட்டும்" என்று கூறிய விஜய், தவெகவை மாபெரும் மக்கள் சக்தி என்று விவரித்தார். பின்னர், நம்முடைய அணி ஒருபக்கம், திமுக தலைமையில் மற்ற கூட்டணி கட்சிகள் மறுபக்கம், அடுத்து பாஜக தலைமையில் மற்றும் பலர் என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சி..! நேரம் நெருங்கிடுச்சு..! அதிமுக திட்டவட்டம்..!
இந்த வார்த்தைகளைச் சொன்னவுடன் தொண்டர்கள் ஆரவாரம் செய்து சிரித்தனர்.இதன் மூலம், அதிமுக - பாஜக கூட்டணியை "பாஜக தலைமையில்" என்று சுட்டிக்காட்டி, அதிமுகவுக்கு பெரிய ரோல் இல்லை என்பதை அழுத்தமாக வெளிப்படுத்தினார். அதிமுகவை நேரடியாக "அதிமுக" என்று அழைக்காமல், பாஜகவை முன்னிலைப்படுத்தி கூட்டணியை விமர்சித்தது, அக்கட்சியை ஓரங்கட்டும் வகையில் அமைந்திருந்தது. "எத்தனை சக்திகள் வந்தாலும், திமுகவை வீழ்த்த தவெகவால் மட்டும்தான் முடியும்" என்று வலியுறுத்தி, தவெகவை திமுகவுக்கு எதிரான முதன்மை எதிர்ப்பு சக்தியாக காட்டினார்.
இதையும் படிங்க: டூரிஸ்ட்டுளுக்கு பாதுக்காப்பான மாநிலம் தமிழ்நாடு... உலகளாவிய சுற்றுலா மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரை..!