புதுச்சேரிக்குச் சுற்றுலா வந்த பெங்களூரு குடும்பத்தினர் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குடும்பத் தலைவி பரிதாபமாக உயிரிழந்தார். வீராம்பட்டினம் கடல் பகுதியில் இன்று நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம், சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ஏசி கோஸ்ட் பகுதியைச் சேர்ந்த விஜய், தனது மனைவி சோனியா, மூன்று குழந்தைகள் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 8 பேர் நேற்று புதுச்சேரிக்குச் சுற்றுலா வந்து வீராம்பட்டினத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர்.

இன்று மதியம் வீராம்பட்டினத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்குச் சொந்தமான படகில் விஜய் குடும்பத்தினர் 8 பேரும் கடலில் சவாரி சென்றுள்ளனர். சின்ன வீராம்பட்டினம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக எழுந்த ராட்சத அலையில் சிக்கிப் படகு நிலைகுலைந்து கவிழ்ந்தது. படகு கவிழ்வதைக் கண்ட அங்கிருந்த மீனவர்கள், உடனடியாகத் தங்களது மீன்பிடி படகுகள் மூலம் விரைந்து சென்று கடலில் தத்தளித்தவர்களை மீட்டுக் கரைக்குக் கொண்டு வந்தனர். இதில் கடலில் மூழ்கிய சோனியா (விஜயன் மனைவி) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், சந்தியா மற்றும் சத்தீஸ்வரி ஆகிய இருவர் பலத்த காயமடைந்து புதுச்சேரி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 5 பேருக்கு லேசான காயங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: புதுச்சேரி தவெக புதிய நிர்வாகக் குழு அறிவிப்பு... 30 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டார் விஜய்!
உரிய உரிமம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றிச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகுகளால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதாகவும், இதுகுறித்து சுற்றுலாத் துறைக்கு முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் ஆவேசமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விதிமுறைகளை மீறிப் படகை இயக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ள நிலையில், இந்த விபத்து புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விசில் பறக்கும் புதுச்சேரி... தமிழகத்தை தொடர்ந்து தவெக-வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!