சென்னையின் ஐடி துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று இன்று நிகழ்ந்துள்ளது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள இன்போசிஸ் நிறுவனத்திற்கும், துரைப்பாக்கத்தில் உள்ள சென்னை ஒன் ஐடி பார்க்கிற்கும் அநாமதேய இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் காலை 9 மணியளவில் நிறுவன நிர்வாகத்திற்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இரு நிறுவனங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்போசிஸ் அலுவலகத்தில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதேபோல், சென்னை ஒன் ஐடி பார்க்கில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள், சுமார் 10,000 பேர், பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர்.
இதையும் படிங்க: வேகமெடுக்கும் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி.. ரூ.250 கோடிக்கு ஒப்பந்தம்..!!
வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் இறுதி வரை எந்த வெடிமருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மிரட்டல் இ-மெயிலில் "இன்று மதியம் 12 மணிக்கு வெடிகுண்டுகள் வெடிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை போலீஸ் சைபர் கிரைம் பிரிவு, இ-மெயிலின் மூலத்தை கண்டறிய தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. "இது போலியான மிரட்டலாக இருக்கலாம், ஆனால் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம்" என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் கடந்த ஒரு மாதத்தில் 30-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் பதிவாகியுள்ளன. புதிய தலைமுறை டிவி, பிரெஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா அலுவலகம், அரசு அலுவலகங்கள், நடிகர் விஜய் வீடு, முதல்வர் ஸ்டாலின் இல்லம் உள்ளிட்ட இடங்களுக்கு இத்தகைய மிரட்டல்கள் வந்தன. அனைத்தும் பொய்யானவை எனத் தெரிந்துள்ளது. இந்த சம்பவங்களுடன் தொடர்பு இருக்கலாமா என விசாரணை நடக்கிறது.
இந்த சம்பவத்தால் ஐடி துறை ஊழியர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. "இத்தகைய மிரட்டல்கள் தொழிலை பாதிக்கும்" என்று இன்போசிஸ் ஊழியர் ஒருவர் கூறினார். போலீசார் பொதுமக்களை அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் சென்னையின் ஐடி ஹப் பகுதிகளான ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்போசிஸ் நிறுவனத்தில் பணிகுறைப்பு, ஊழியர்கள் குறைப்பு என இருப்பதால் ஐடி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏஐ ஆக்கிரமிப்பால் இன்போசிஸ் நிறுவனம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் ஊழியர்கள் தினமும் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என தெரிவித்துள்ளது. அண்மையில் வாரத்திற்கு 70 மணி நேரம் ஊழியர்கள் அனைவரும் பணிபுரிய வேண்டும் என நாராயணமூர்த்தி தெரிவித்திருந்தார்.
அவருடைய கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்போசிஸ் ஊழியர்கள் தினமும் 9.15 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்ற மின்னஞ்சல் உத்தரவால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது போன்ற ஊழியர் குறைப்பு, நேர கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஐடி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்த சென்னையின் அடையாளம்.. AVM ராஜேஸ்வரி தியேட்டர் இடிக்கும் பணி தொடக்கம்..!!