மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பிரேசில் அதிபரின் இந்தப் பயணம் இந்திய-பிரேசில் இடையிலான உறவில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள 2வது AI உச்சி மாநாட்டில் அதிபர் லுலா பங்கேற்கிறார். "அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு" (AI for All) என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த சர்வதேச மாநாட்டில், உலகளாவிய AI நிர்வாகம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்து அவர் உரையாற்றுவார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனும் இந்த மாநாட்டில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 21 அன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரேசில் அதிபர் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவார். இதில் வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்திக்கும் அதிபர் லுலாவுக்கு, ராஷ்டிரபதி பவனில் சிறப்பான விருந்து அளிக்கப்படும்.
இதையும் படிங்க: டிஜிட்டல் உலகிற்கு அடிமையாகாதீங்க.. போதுமான தூக்கம் தேவை..!! மாணவர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்..!!
அவருடன் வரும் பிரேசில் நாட்டின் 14 அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (CEOs), இந்தியத் தொழில் அதிபர்களுடன் வர்த்தக ரீதியானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள். அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கை மாற்றங்களுக்கு மத்தியில், இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளும் தங்களின் பொருளாதாரச் சார்பைக் குறைத்து, பரஸ்பர வர்த்தகத்தை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளன.
வளர்ந்து வரும் நாடுகளின் குரலாகத் திகழும் இந்தியா மற்றும் பிரேசில், சர்வதேச அரங்கில் தங்களின் செல்வாக்கை வலுப்படுத்த இந்தப் பயணம் உதவும். இந்தப் பயணத்தின் போது டெல்லியில் பிரேசில் நாட்டின் வர்த்தக மேம்பாட்டு நிறுவனமான 'Apex-Brasil' அலுவலகம் திறந்து வைக்கப்பட உள்ளது. அதிபர் லுலா இதுவரை 6 முறை இந்தியா வந்துள்ளார். கடைசியாக 2023-ல் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டிற்கு வந்திருந்தார். தற்போது AI தொழில்நுட்பத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அவர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இதையும் படிங்க: BIG BREAKING: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்!