பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒடிசா, பஞ்சாப், மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் நான்கு செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்கு ரூ.4,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தியாவின் செமிகண்டக்டர் மிஷன் திட்டத்தின் கீழ், இந்த முயற்சி நாட்டின் தொழில்நுட்பத் துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். ஒடிசா மாநிலத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள இன்ஃபோ வேலியில் SiCSem Pvt Ltd நிறுவனம் ரூ.2,066 கோடி முதலீட்டில் சிலிக்கான் கார்பைடு (SiC) அடிப்படையிலான செமிகண்டக்டர் ஆலை அமைக்கவுள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 60,000 வேஃபர்கள் மற்றும் 96 மில்லியன் பேக்கேஜிங் யூனிட்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இது மின்சார வாகனங்கள், ரயில்வே, வேகமான சார்ஜர்கள், தரவு மையங்கள், சூரிய இன்வெர்ட்டர்கள், நுகர்வு உபகரணங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகளுக்கு பயன்படுத்தப்படும்.
இதையும் படிங்க: 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' கேப்டனுடைய கனவு திட்டம்.. பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்..!!
மேலும், ஒடிசாவில் மற்றொரு ஆலை 3D Glass Solutions Inc. நிறுவனத்தால் ரூ.1,943 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ளது. இது உலகின் மிக மேம்பட்ட செமிகண்டக்டர் பேக்கேஜிங் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டு வரும். இந்த ஆலை ஆண்டுக்கு 69,600 கண்ணாடி பேனல் சப்ஸ்ட்ரேட்டுகள், 50 மில்லியன் அசெம்பிள்டு யூனிட்கள் மற்றும் 13,200 3DHI மாட்யூல்களை உற்பத்தி செய்யும். இதற்கு இன்டெல், லாக்ஹீட் மார்ட்டின் உள்ளிட்ட முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் முதலீடு உள்ளது.
இந்தியாவை உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு இத்திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த முயற்சியால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு இது பெரும் உந்துதலாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த ஆலைகள் மின்னணு சாதனங்கள், தொலைத்தொடர்பு, மற்றும் பாதுகாப்புத் துறைகளில் பயன்படுத்தப்படும் செமிகண்டக்டர்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இதன்மூலம், வெளிநாட்டு இறக்குமதியை குறைத்து, இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். இந்தத் திட்டங்கள் இந்தியாவின் தொழில்நுட்ப சுயசார்பு மற்றும் புதுமைத்திறனை வெளிப்படுத்துவதாக அமையும். உலகளாவிய அளவில் செமிகண்டக்டர் தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்த முயற்சி இந்தியாவை தொழில்நுட்ப உற்பத்தியில் முன்னணியில் நிறுத்தும் என நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: அம்மானா சும்மாவா? இறந்த மகனின் கையை பிடித்தபடியே உயிரை விட்ட தாய்...