மாநிலங்களின் பண்பாட்டு அடையாளமான தமிழ்த்தாய் வாழ்த்தைப் படிப்படியாக இருட்டடிப்பு செய்யும் மறைமுக நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ள 'வந்தே மாதரம் சட்ட மசோதாவை' ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஆவேசமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வந்தே மாதரம் தேசியப் பாடலுக்குத் தேசியக் கீதத்திற்கு இணையான சம அந்தஸ்து வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள சூழலில், இச்சட்ட மசோதாவுக்குத் தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.
இது குறித்துத் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி எம்பி, "வந்தே மாதரம் பாடலுக்குத் தேசியக் கீதத்திற்கு இணையான அந்தஸ்து அளிப்பதாகக் கூறி மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்ட மசோதாவானது, மாநிலங்களின் சுயமரியாதையையும் பண்பாட்டு உரிமைகளையும் நசுக்கும் செயலாகும்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் மொழியுரிமையில் கை வைத்தால் சகித்து கொள்ள மாட்டோம்! தவெக எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் நடத்தப்படும் அனைத்து அரசு விழாக்களிலும் முதன்மையாகப் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்தை நிரந்தரமாக இருட்டடிப்பு செய்யும் துர்நோக்கமே இந்த மசோதாவின் பின்னணியில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "மாநில உரிமைகளுக்கும், தமிழர்களின் தாய்மொழிப் பற்றிற்கும் வேட்டு வைக்கும் வகையிலான இத்தகைய ஒருதரப்பான சட்ட மசோதாவைத் திமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் இந்த ஆதிக்கப் போக்கைக் கண்டித்துத் தொடர்ந்து குரல் கொடுப்போம்" எனக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
கனிமொழியின் இந்த அதிரடி அறிக்கை தேசிய மற்றும் மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? நெல்லை பல்கலைக்கழக நிகழ்வுக்கு சிபிஎம் கண்டனம்!