சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) கொள்முதல் தொடர்பான முக்கிய ஆவணங்கள் இருந்த ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர். தி.மு.க. ஆட்சியில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் 397 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்வாரிய அலுவலகத்தில் மின்மாற்றிகள் கொள்முதல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் மற்றும் விவரங்கள் சேமிக்கப்பட்டிருந்த கணினி ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி பிரபு தலைமையில் ஒரு எஸ்பி மற்றும் மூன்று டிஎஸ்பிக்கள் அடங்கிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் சிபிசிஐடி அதிகாரிகள் மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அலுவலக ஊழியர்கள், பொறுப்பு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஹார்ட் டிஸ்க் திருட்டு எப்படி, யாரால் நடைபெற்றது, யாருக்கு இதில் சம்பந்தம் உள்ளது என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை தேடும் பணி தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.2,500க்கு விற்கப்பட்ட ஹார்டு டிஸ்க்! ஆதாரங்களை அழிக்க முயற்சி! விசாரணையில் வெளியான பகீர்!
397 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், முக்கிய ஆதாரங்களாகக் கருதப்பட்ட ஆவணங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டது பலரது சந்தேகத்தை அதிகரித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அதிகாரிகள் உள்பட பலரும் விசாரணை வளையத்துக்கு உள்ளாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக மின்வாரியத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பெரும் ஊழல் விவகாரம் இப்போது சிபிசிஐடி விசாரணைக்கு உள்ளாகியுள்ளது. இந்த விசாரணையின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை தமிழக மக்கள் உற்று நோக்கி வருகின்றனர். மின் வாரிய ஊழல் விவகாரம் மீண்டும் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
சிபிசிஐடி அதிகாரிகள் விரைவில் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவார்கள் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: ரூ.2,500க்கு விற்கப்பட்ட ஹார்டு டிஸ்க்! ஆதாரங்களை அழிக்க முயற்சி! விசாரணையில் வெளியான பகீர்!