தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமையகமான நிர்வாசன் சதன் மற்றும் ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாகச் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பி-க்கள் மற்றும் தலைவர்களை டெல்லி காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்தனர்.
வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளின் போது கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் சட்டவிரோதமாக நீக்கப்பட்டதாகவும், தேர்தல் ஆணையம் ஜனநாயக விரோதமாகச் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கக் கோரி இந்தியா கூட்டணிக் கட்சிகள் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர்.
அப்போது நாடாளுமன்ற வீதி மற்றும் நிதி ஆயோக் அலுவலகம் அருகே டெல்லி காவல்துறையினர் பிரம்மாண்ட இரும்புத் தடுப்புகளை அமைத்தும், பேருந்துகளைக் குறுக்காக நிறுத்தியும் தலைவர்களை வழிமறித்தனர். ஆனால், தடைகளை மீறி முன்னேற முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தடுப்புகள் மீது துணிச்சலாக ஏறி நின்று தேசியக் கொடியை அசைத்து ஜனநாயகத்தைக் காக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினார். அவருடன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்களும் இணைந்தனர்.
இதையும் படிங்க: ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்குகள்..! உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்.! சிக்கலில் தேர்தல் ஆணையம்..!!

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகப் பிடித்துக் காவல் பேருந்துகளில் ஏற்றினர். பின்னர் ஜந்தர் மந்தர் மற்றும் ஆகாஷ்வாணி பவன் பகுதிகளை நோக்கிப் பேரணியாகச் சென்று சாலைகளில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை டெல்லி போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்தனர்.
இப்போராட்டம் குறித்துப் பேசிய ராகுல் காந்தி, சுமார் 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையரைச் சந்தித்து எங்கள் தரப்பு நியாயத்தைக் கூற விரும்பினோம். ஆனால், எங்களைச் சந்திக்க தேர்தல் ஆணையர் மறுத்துவிட்டார்; காவல்துறையினரை ஏவி எங்களை அச்சுறுத்துகிறார்கள். நாட்டின் ஜனநாயகத்தை அழித்த ஞானேஷ்குமார் சட்டப்பூர்வமான தேர்தல் ஆணையரே அல்ல; அவர் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். என் மீது 45 வழக்குகள் உள்ளன; 100 வழக்குகள் போட்டாலும் மக்கள் நலனுக்காகவும் ஜனநாயகத்தைக் காக்கவும் தொடர்ந்து போராடுவோம் என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
அதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள், தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டதாகவும், இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் எச்சரித்தனர்.
இதையும் படிங்க: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை! கேரளம் அரசு உத்தரவு!