2026 எல் நினோ தற்போது வலுவடைந்து வருகிறது. WMO, ஆகஸ்ட்–அக்டோபர் காலத்தில் எல் நினோ உலகளாவிய மழைப்பொழிவு முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கூறுகிறது. சமீபத்திய சர்வதேச கணிப்புகளிலும், 2026 இறுதியில் எல் நினோ வலுவாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, எல் நினோ பொதுவாக தென்மேற்கு பருவமழையை பலவீனப்படுத்தும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 24 நிலவரப்படி இந்தியாவின் ஒட்டுமொத்த தென்மேற்கு பருவமழை இயல்பை விட 13% குறைவாக இருப்பதாகவும், எல் நினோ காரணமாக செப்டம்பர் மழையும் பாதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல் நினோ பொதுவாக இந்தியாவின் தென்மேற்கு பருவமழையை குறைக்கும் என்றாலும், தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழையில் அதன் தாக்கம் நேர்மாறாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே தமிழ்நாடு முழுவதும் வறட்சி, வெள்ளம் போன்ற நிலைகளை சமாளிப்பதற்கான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் 240க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொளந்தெடுக்கப்போகும் கனமழை... இன்று எங்கெல்லாம் வெளுத்து வாங்கப்போகுது தெரியுமா?
அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் 21 இடங்களிலும், மணலி மண்டலத்தில் 8 இடங்களிலும், மாதவரம் மண்டலத்தில் 14 இடங்களிலும், அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 51 இடங்களிலும், ராயபுரம் மண்டலத்தில் 24 இடங்களிலும் மழைநீர் தேங்கக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அதேபோல், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி உள்ளிட்ட மண்டலங்களிலும் மழைநீர் தேங்கக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பெருங்குடி மண்டலத்தில் 44 இடங்கள் மழைநீர் தேங்கக்கூடிய இடங்களாக சென்னை மாநகராட்சியால் கண்டறியப்பட்டுள்ளன.
சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 38 இடங்களில் மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக வெள்ளம் தேங்கிய பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆண்டு 263 இடங்கள் மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்த 263 இடங்களில் 124 இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், 122 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 30 நாட்களில் இந்தப் பணிகள் நிறைவுபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மழை பெய்யும்போது நீர் தேங்காமல் இருப்பதற்காக, மழைக்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குறைந்த உயரம் கொண்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான பணிகளும், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: சென்னைக்கு வெள்ள அபாயம்... பரந்தூர் ஏர்போர்ட்டால் பெரும் ஆபத்து..! அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை.!!