சென்னை அடையார் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட அதே மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பலை அடையார் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
அடையார் கேனல் ரோடு சாலை முகத்துவாரப் பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு சாக்கு மூட்டையைச் சோதனையிட்டபோது, அதில் ரத்தக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ் குமார் என்பது உறுதியானது.
இந்தக் கொலை தொடர்பாகக் குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலையாளிகள் சென்னையை விட்டுத் தப்ப முயன்றபோது, சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் அவர்களின் செல்போன் சிக்னல்களைத் தொடர்ந்து கண்காணித்து போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்தனர். பிடிபட்ட 7 பேரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க: பைனான்சியர் மிரட்டல் வழக்கு! - தயாரிப்பாளர் சதீஷ்குமார் மீது அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவு
கைது செய்யப்பட்ட கொலையாளிகள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. கௌரவ் குமார் மட்டுமின்றி, அவரது மனைவி மற்றும் குழந்தையையும் சேர்த்து முழு குடும்பத்தையுமே தாங்கள் கொலை செய்துவிட்டதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். கௌரவ் குமாரின் சடலத்தைச் சாக்கு மூட்டையில் கட்டிச் சாலை ஓரம் வீசிய கொலையாளிகள், அவரது மனைவி மற்றும் குழந்தையின் சடலங்களை அடையார் முகத்துவாரப் பகுதி மற்றும் அடையார் கூவம் ஆறு ஆகிய இடங்களில் வீசியதாகத் தெரிவித்துள்ளனர்.
கொலையாளிகள் சொன்ன அடையாளங்களை வைத்து, அடையார் ஆறு மற்றும் கடல் முகத்துவாரப் பகுதிகளில் மாயமான பெண் மற்றும் குழந்தையின் உடல்களை மீட்க போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் சென்னையில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே ஒரு குடும்பமே கூலிப்படையால் தீர்த்துக்கட்டப்பட்டச் சம்பவம் பொதுமக்கள் மற்றும் அண்டை மாநிலத் தொழிலாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசியல் நாகரிகம்! - விமான நிலையத்தில் துர்கா ஸ்டாலினை சந்தித்த நயினார் நாகேந்திரன்