தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (TNSTC) பேருந்துகளில் நவீனமாக அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பெயர் பலகைகள், பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பஸ்களின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் வழித்தடம், இலக்கு ஊர் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காட்டும். இரவு நேரங்களில் ஒளிரும் தன்மையுடன் இருப்பதால், பயணிகள் எளிதில் அடையாளம் காண முடியும். எனினும், சமீபத்தில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் பயணிகளிடையே குழப்பத்தையும், சமூக வலைதளங்களில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு, சத்திரம் பேருந்து நிலையத்தில் லால்குடி, பெருவளநல்லூர், குமுளூர் வழியாக கொளக்குடி வரை செல்லும் அரசு டவுன் பஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த பஸ்சின் டிஜிட்டல் பெயர் பலகையில் திடீரென சீன மொழி எழுத்துக்கள் தோன்றின. இதனால், பஸ் செல்லும் இடம் என்னவென்று புரியாமல் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் இதை வீடியோவாக பதிவு செய்து, "திருச்சியில் இருந்து சீனாவுக்கு சிறப்பு பஸ்" என்று கலாய்த்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ விரைவில் வைரலாகி, பலரும் விவாதித்தனர்.

இச்சம்பவம் குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரித்தபோது, டிஜிட்டல் பலகையின் எலக்ட்ரானிக் சர்க்யூட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம் என்று தெரிவித்தனர். பஸ் ஊழியர்கள் உடனடியாக அமைப்பை சரிசெய்து, தமிழில் மாற்றினர். மேலும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளின் டிஜிட்டல் பலகைகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறினர்.
இதையும் படிங்க: இந்தா ஆரம்பிச்சிட்டாங்க இல்ல... விஜய் தலையில் இறங்கியது இடி... போலீஸ் கொடுத்த ஷாக்
இதேபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் நடந்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம், பழனி பேருந்து நிலையத்தில் திண்டுக்கல்-பொள்ளாச்சி வழி பேருந்தின் டிஜிட்டல் பலகையில் சீன மொழி தோன்றியது. அங்கு, சாப்ட்வேர் சீனாவில் தயாரிக்கப்பட்டதால், ஆரம்பத்தில் சீனத்தில் காட்டப்படும் என்றும், டிரைவர் அல்லது கண்டக்டர் மாற்ற வேண்டும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது பயணிகள் குழப்பமடைந்தனர். திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இதேபோல் நடந்தபோது, அரசியல் விவாதங்களும் எழுந்தன. சிலர் இதை திமுக அரசின் சீனா தொடர்புடன் இணைத்து விமர்சித்தனர்.
இத்தகைய தொழில்நுட்பக் கோளாறுகள், பேருந்துகளின் டிஜிட்டல் அமைப்புகளை சீன தொழில்நுட்பத்துடன் இணைத்து தயாரிப்பதால் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. போக்குவரத்துத் துறை, இனி உள்ளூர் அல்லது நம்பகமான சாப்ட்வேர்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம், தமிழ்நாட்டில் டிஜிட்டல் போக்குவரத்து அமைப்புகளின் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: செக் வைத்த போலீஸ்... உடைத்தெறிந்த விஜய்... திருச்சியை அதிர விட்ட தரமான சம்பவங்கள்...!