தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தனது சொந்த ஊரான திருவாரூரில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி பிரசாரத்தை தொடங்கிய அவர், ஏற்கனவே இரண்டு கட்ட பிரசாரப் பயணங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

மூன்றாவது கட்ட பிரசாரத்தை புதுச்சேரியில் நேற்று தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்ற உள்ளார். இன்று காலை சீர்காழி தென்பாதி பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த பொதுமக்களிடம் நலம் விசாரித்ததோடு, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: சங்கி படையை விரட்டி அடிப்போம்... புதுச்சேரி மண்ணில் நின்று கர்ஜித்த முதலமைச்சர் ஸ்டாலின்...!
மேலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த வாக்கு சேகரிப்பின்போது, மக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. இதுகுறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், “உதிப்பது உதயசூரியன்தான்: சீர்காழியில் ஒலித்த மக்களின் குரல்” என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார்.
அண்ணன் வைகோவின் ஆதரவு பெற்ற மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனுக்கு ஆதரவாக இன்று காலை சீர்காழியின் வீதிகளில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “எங்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது. திராவிட மாடல் அரசின் திட்டங்களை நான் கூறுவதற்கு முன், மக்களே என்னிடம் சொல்லி மகிழ்கிறார்கள். சீர்காழியிலேயே அவரவர் பகுதிகளில் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என என்னை உரிமையோடு நிறுத்திச் சொல்கிறார்கள். இதைவிட வேறென்ன வேண்டும்! மீண்டும் கழக ஆட்சியே! வெல்வோம் ஒன்றாக!” என்று உற்சாகமாக பதிவிட்டுள்ளார்.

சீர்காழியில் மக்களின் உற்சாகமான வரவேற்பு மற்றும் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பாராட்டியது, மு.க.ஸ்டாலினுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் இந்த கட்டத்தில் மக்களிடையே திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவான பெரும் அலை உருவாகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
இதையும் படிங்க: உதயசூரியன் உதித்ததும் சூறாவளியாய் கிளம்பிய சி.எம். ஸ்டாலின்... வாக்கிங்கில் வாக்கு வேட்டை...!