மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், அவதூறாகவும் பேசி வீடியோ பதிவிட்ட யூடியூபர் முக்தார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத்தினர் புகார் அளித்துள்ளனர். இதேபோல், நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் சார்பிலும் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
யூடியூபர் முக்தார் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், முன்னாள் முதல்வர் காமராஜரின் மகத்தான சேவைகள், மக்கள் பணி மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கான பங்களிப்பு ஆகியவற்றைத் திட்டமிட்டு அவதூறு செய்யும் விதமாகப் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமராஜரின் காலத்தில் நடந்த பொதுப்பணிகள், அணை கட்டுமானங்கள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் அனைத்தையும் பொய்யாக விமர்சித்துள்ளார். நாடார் சமுதாயத்தைப் பயன்படுத்தி அணைக்கட்டுகள் கட்டி லாபம் அடையச் செய்தார். சிவகாசியில் கள்ள நோட்டுகள் அச்சடிக்க வாய்ப்பளித்தார், இந்த முறைகேடுகள் தெரிந்ததால் நேரு, காமராஜரை நீக்கினார் போன்ற உண்மைக்குப் புறம்பான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவிலேயே முதல் முறை! உள்ளாட்சி அமைப்புகளில் 9,000 மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்! - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!
இவ்வாறு தவறான தகவல்களைப் பரப்பியதால், காமராஜரின் தொண்டர்களும், சுமார் 1.5 கோடி மக்கள் தொகை கொண்ட நாடார் சமுதாயமும் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இது தமிழ்நாட்டில் மத மோதல்களையும் சாதி மோதல்களையும் தூண்ட முயற்சி செய்வதாகவும், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத்தின் தலைவர் சந்திரன் ஜெயபால், யூடியூபர் முக்தார் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், காமராஜரின் மகத்தான சேவை, மக்கள் பணி மற்றும் நாட்டின் முன்னேற்றப் பங்களிப்பு ஆகியவற்றைத் திட்டமிட்டு அவதூறு செய்யும் விதமாகப் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், யூடியூபர் முக்தார் தனது பேச்சு மூலம் தமிழ்நாட்டில் மத மோதல்களையும், சாதி மோதல்களையும் தூண்ட முயற்சி செய்வதோடு, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும் ஆபத்தையும் ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். எனவே, சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் ஏற்படும் முன் போலீசார் முக்தாரை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மக்களின் துயரத்திற்கு தமிழக அரசு தான் காரணம்! வடிகால் பணிகள் முழுமையடையாதது ஏன்? தவெக தலைவர் விஜய் சரமாரி கேள்வி!