காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது ஒன்று. அதன்படி 700க்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் காஷ்மீரை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் முனீர் அகமதுவின் மனைவி மினல் கான் நாடு கடத்தப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காரணம் மினல் கான் பாகிஸ்தானை சேர்ந்தவர். முன்னதாக 41வது பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வந்த முனீர் அகமது பாகிஸ்தானை சேர்ந்த மினல் கானை திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு மனைவியை காஷ்மீர் அழைத்து வந்து வசித்துள்ளார். தற்போது பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படும் நிலையில் அவரது மனைவியும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இருந்து அட்டாரி - வாகா எல்லைக்கு மினல் கான் அழைத்து வரப்பட்டார். எல்லையில் அவர் வந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் 10 நாட்கள் வரை தற்காலிகமாக மினல் கான் நம் நாட்டில் தங்க அனுமதி வழங்கியது.
இதையும் படிங்க: காஷ்மீரின் அசாதாரண நிலை! பிரதமருடன் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அவசர ஆலோசனை...

இதையடுத்து மினல் கான் மீண்டும் ஜம்மு காஷ்மீர் திரும்பினார். இதற்கிடையே தான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த முனீர் அகமது மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையின் போது அவர் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ய சி.ஆர்.பி.எப். உயரதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. பாதுகாப்பு துறை சார்ந்த பணியில் இருப்பவர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை திருமணம் செய்யும்போது முறையான அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை இருக்கும் நிலையில் முனீர் அகமது முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக நமது எதிரி நாடாக உள்ள பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை கரம்பிடித்துள்ள அவர், அதுபற்றி அனுமதி கோரியுள்ளார்.

ஆனால் அதிகாரிகள் அதனை பரிசீலிக்கும் முன்பாகவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 24ம் மினல் கானுடன் வாட்ஸ்அப் காலில் திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு மினல் கான் வாகா எல்லை வழியாக சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளார். இந்த விசா காலம் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி காலாவதியானது. அதன்பிறகு அவர் தொடர்ந்து இந்தியாவில் வசித்து வந்துள்ள நிலையில் தற்போது மத்திய அரசு பாகிஸ்தானியர்களை வெளியேற்ற வேண்டும் என்று போட்ட உத்தரவால் இருவரும் தற்போது சிக்கி உள்ளனர். அதுமட்டுமின்றி மனைவி மினல் கானின் விசா காலாவதியாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் 22ம் தேதியுடன் அவரது விசா காலம் முடிவடைந்துள்ளது. அதனை புதுப்பிக்காமல் முனீர் அகமது தனது மனைவியை தன்னுடன் வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து முனீர் அகமது அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: புருஷனை சுட்டுக் கொன்றவர்களுக்கு வக்காலத்து... புத்தி கெட்டுப்போனாரா புல்லட் லவ்வர்..? வலுக்கும் எதிர்ப்பு..!