வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தாலும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் வானிலை நிலவரம் கவனத்தை ஈர்த்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு ஒடிஷா, மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இந்த அமைப்பு அடுத்த மூன்று நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிஷா மற்றும் வடக்கு சத்தீஸ்கர் பகுதிகளை நோக்கி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வானிலை மாற்றத்தின் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு சாதகமான சூழல் நிலவும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை 7 மாவட்டம்! நாளைமறுநாள் 12 மாவட்டம்! கொட்டித்தீர்க்க போகும் கனமழை! வானிலை எச்சரிக்கை!

மேலும், நாளை முதல் வரும் 10-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் இடைவிடாத லேசான மழை தொடரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அலுவலகம் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், நேற்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்நிலைகளின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ள நிலையில், மழை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்திருப்பது விவசாயிகளுக்கு நம்பிக்கையையும், பொதுமக்களுக்கு எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு! வளிமண்டல சுழற்சியால் மிரட்டும் வானிலை! உஷார்!