சென்னை: தமிழக அரசு பள்ளி பாடப்புத்தகங்களில், கடந்த தி.மு.க. ஆட்சியில் சேர்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் புகழ் பாடும் பாடங்களை நீக்கி அல்லது மாற்றி அமைக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக உள்ளது. இந்தப் பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் தயாரித்து வருகிறது. ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவது வழக்கம்.
தற்போது, 10-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ‘பன்முகக் கலைஞர்’ என்ற தலைப்பில் ஐந்து பக்கங்கள் கொண்ட பாடத்தில் கருணாநிதியின் இளமைக்காலம், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், நாடகம், திரைப்படம், இலக்கியம் உள்ளிட்டவை விரிவாக இடம்பெற்றுள்ளன. அவரது நூல்களான ‘தொல்காப்பியப் பூங்கா’, ‘குறளோவியம்’, ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகியவையும், வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை போன்ற கட்டுமானங்களும் இந்தப் பாடத்தில் இடம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: சாவிய கொடுங்க! நான் ஓட்டிப்பாக்குறேன்! புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு!

இதேபோல், 9-ம் வகுப்பில் பெரியாரின் சிந்தனைகள், 8-ம் வகுப்பில் எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம், 7-ம் வகுப்பில் அண்ணாதுரையின் பொன்மொழிகள் உள்ளிட்ட பகுதிகளும் உள்ளன. இந்தப் பாடங்கள் தி.மு.க. ஆட்சியில் சேர்க்கப்பட்டவை என்று கூறப்படுகிறது.
எனினும், தேசியத் தலைவர்களான காந்தி, நேரு, அம்பேத்கர், நேதாஜி போன்றோர் குறித்து ஒப்பீட்டளவில் குறைவான இடமே ஒதுக்கப்பட்டுள்ளது. பாரதியார், கண்ணதாசன் உள்ளிட்ட கவிஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் பிற தலைவர்களின் பங்களிப்பு முழுமையாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், பாடப்புத்தகங்களில் உள்ள ஒருதலைச்சார்பான புகழ் பாடும் பகுதிகளை நீக்கி, அனைத்து தலைவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். பாடநூல்கள் அரசியல் சார்பற்ற வகையில், வரலாற்று உண்மைகளை மட்டும் பிரதிபலிக்கும் விதத்தில் தயாரிக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.
இந்த விவகாரம் தமிழக கல்வித் துறையில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடத்திட்ட மாற்றம் குறித்து அரசு விரைவில் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முதல்வர் விஜயின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! துறை ரீதியான திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த முடிவு!