மக்களின் ஜனநாயக வாக்குரிமையை அற்பமாக மதித்து ஆணவத்தின் உச்சத்தில் மிதக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் அவரது தமிழக வெற்றிக் கழகத்திற்கும், தாராபுரம் தொகுதி வாக்காளப் பெருமக்கள் தேர்தல் களத்தில் கொடுக்கப்போகும் அடியானது வாழ்நாளுக்கும் மறக்க முடியாத ஒரு மரண அடியாக இருக்க வேண்டும் என்றும், திரையில் 'ஜனநாயகன்' என வேடமிட்டவர் இன்றைக்குக் குதிரை பேரம் பேசி இடைத்தேர்தலைத் திணித்து நிஜ அரசியலில் ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் வில்லனாகவே மாறி நிற்கிறார் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று மிகக் காரசாரமாக இடிமுழக்கமிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, தாராபுரம் நகரில் அமராவதி சிலை முதல் உடுமலை சாலை வரை பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ பிரம்மாண்ட ரோடு ஷோ (Road Show) வாகன அணிவகுப்பு நடத்திய பின்னர், மல்லி ரிசார்ட் மைதான வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் எழுச்சிப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு ஆளும்கட்சியின் முகத்திரையைக் கிழித்தெறியும் வகையில் அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார்.
பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய்யின் அரசியல் சரணாகதியை மிகக் காட்டமாகச் சாடிய மு.க. ஸ்டாலின், "இன்றைக்கு நாடெங்கும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராகவும், வாக்காளர் பட்டியலில் லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமையைப் பறித்த எஸ்ஐஆர் (SIR) நடைமுறைக்கு எதிராகவும் ஒட்டுமொத்த இந்தியாவும் கொந்தளித்துப் போர்க்கொடி தூக்கியுள்ளது.
இதையும் படிங்க: ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவரானது துரதிர்ஷ்டம்: 'செமி இந்தியன்' என எச்.ராஜா விளாசல்!

அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், ஏன் பிரபல நடிகர்கள் கூட டெல்லி வரை சென்று தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்; ஆனால், தமிழகத்தின் முதலமைச்சராக நாற்காலியில் அமர்ந்திருக்கும் விஜய் அவர்களே, இந்தத் தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தில் நீங்கள் ஏன் வாய் திறந்து பேச மாட்டேங்கிறீர்கள்? என்ன சார் பயம் உங்களுக்கு? பாஜக-ன்னா உங்களுக்கு அவ்வளவு பயமா சார்? மத்தியில் ஆளும் மோடி அரசுக்கும் பாஜகவுக்கும் அஞ்சி நடுங்கிக்கொண்டு வாய்மூடி மவுனம் காப்பதுதான் உங்கள் கொள்கையா?" என்று நேரடியாகக் கேள்வி எழுப்பி அரங்கையே அதிரவைத்தார்.
தொடர்ந்து, இடைத்தேர்தல் உருவான பின்னணியை அம்பலப்படுத்திய அவர், "சினிமா படத்திற்கு 'ஜனநாயகன்' என்று பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் ஒருவர் உண்மையான ஜனநாயகவாதி ஆகிவிட முடியாது; தேர்தல் முடிந்து சில மாதங்களிலேயே எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-விடம் தவெகவின் தலைமை கோடிக்கணக்கில் குதிரை பேரம் பேசி, அந்தப் பதவியை ராஜினாமா செய்ய வைத்து, இன்றைக்கு அப்பாவி தாராபுரம் மக்கள் மீது தேவையற்ற இந்த இடைத்தேர்தலைத் திணித்துள்ளது; இதன் மூலம் முதலமைச்சர் விஜய் ஜனநாயகத்தின் மிகப்பெரிய வில்லனாகத் தனது சுயரூபத்தைக் காட்டியுள்ளார்
.
மக்கள் தங்களுக்கு வாக்களித்த நம்பிக்கையையும், சத்தியத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டுத் தவெகவில் தஞ்சம் புகுந்துள்ள அந்த வேட்பாளரைத் தாராபுரம் தொகுதி மக்கள் 'பெட்டிபாமா', 'பல்டிபாமா' என்றுதான் அழைக்கிறார்கள்; பெட்டி கொடுத்தது யாரு? பெட்டி வாங்குனது யாரு? ஒருத்தர் கிட்ட பெட்டிப் பெட்டியாகப் பணத்தைத் திணித்த காரணத்தினால்தான் உங்கள் தலைமீது இந்த இடைத்தேர்தல் அநியாயமாகத் திணிக்கப்பட்டுள்ளது; தாராபுரத்தின் தன்மானத்தை விலைபேசிய இந்த துரோகக் கும்பலுக்கு, திமுக வேட்பாளர் சுகன்யாவை உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதன் மூலம் மக்கள் தகுந்த மரண அடி கொடுப்பார்கள்" என்று மு.க. ஸ்டாலின் கர்ஜித்தார்.
இதையும் படிங்க: பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்...! தமிழக EX. MLA வானதிக்கு ஆந்திராவில் பொறுப்பு.! தலைமை முக்கிய முடிவு..!!