தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா, தவெகவில் இணைந்ததையே கொச்சையாக விமர்சித்ததாகக் கூறப்படும் காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்தியபாமா. பின்னர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த அவர், தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து நடைபெறும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் சத்தியபாமா மீண்டும் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவருக்கு தொகுதியில் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது தவெகவில் இணைந்ததையே அவர் தரம் தாழ்ந்து விமர்சித்ததாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அதெப்படி குறையும்..?மரகதம் குமரவேல் வருமான வரி கணக்கு..! அதிமுக கேள்வி..!
அந்த வீடியோவில், கடந்த தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை என்றும், ஆனால் தேர்தலுக்காக ரூ.31 கோடி வரை செலவு செய்ததாகவும் சத்தியபாமா பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், அதிமுகவில் இருந்தபோது தாங்கள் பல்வேறு செலவுகளை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“31 கோடி செலவு... ஒரு பைசா கொடுக்கல” என்று கூறும் அவர், அதிமுகவில் இருந்தபோது கூட்டணிக் கட்சியினருக்காக அறைகள் ஏற்பாடு செய்து கொடுத்தது, ரிசார்ட்டுகளில் அறைகள் முன்பதிவு செய்தது, விமான டிக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு செலவுகளை மேற்கொண்டதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மேலும், “அந்த மாதிரி இருந்துவிட்டு இருப்பது சத்தியமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நிறைய பண்ணிட்டோம்” என்றும் அவர் பேசியுள்ளார்.
கூட்டணிக் கட்சியினர் விமான டிக்கெட் கேட்டபோது அதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுத்ததாகவும், தங்களால் முடிந்த பல்வேறு உதவிகளை செய்ததாகவும் சத்தியபாமா அந்தக் காட்சியில் தெரிவித்துள்ளார்.
சுமார் 19 மற்றும் 40 விநாடிகள் கொண்ட இரண்டு வீடியோக்கள், இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையே பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, தவெகவினர் பூத் கமிட்டி அமைப்பது குறித்து சத்தியபாமாவின் உதவியாளரும் உறவினருமான ஒருவர் தவெகவினரை ஏளனமாக விமர்சிக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், “பூத் கமிட்டி போடுவது எப்படி என்று தெரியவில்லை. பூத் கமிட்டி போடத் தெரியவில்லை என்றால் ஓட்டு எப்படி கேட்க வேண்டும் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்? நகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் என கட்சி நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் தெரிந்திருந்தால், நீங்கள் செலவு செய்வதற்கு அர்த்தம் இருக்கும்” என்று அவர் விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு தவெகவினரை மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில் சத்தியபாமாவும், அவரது உறவினர் எனக் கூறப்படும் நபரும் பேசியதாக வெளியாகியுள்ள இந்த வீடியோ காட்சிகள், அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த வீடியோக்களின் முழுமையான பின்னணி, அவை எப்போது, எந்தச் சூழலில் பதிவு செய்யப்பட்டன என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: கிராமிய கலைஞருக்கு அங்கீகாரம்...! தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராகிறார் புஷ்பவனம் குப்புசாமி..!