தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தில் பணியாற்றும் பெண் கணக்காளர்களை, சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருவதாகவும், புகார் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகளிர் திட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் திட்டம், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், பொருளாதார முன்னேற்றம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கும் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.
தர்மபுரி மாவட்டத்தில் 249 ஊராட்சிகளில் பெண் கணக்காளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர 60 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், 10 வட்டார மேலாளர்கள் மற்றும் திட்டங்களை கண்காணிக்கும் உதவி திட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் பணியில் உள்ளனர்.
இதையும் படிங்க: தூசு தட்டப்படும் மணல் கொள்ளை விவகாரம்! திமுக ஆட்சியில் ரூ.4730 கோடி இழப்பு! விசாரணை தீவிரம்!
ஊராட்சி அளவில் பணியாற்றும் பெண் கணக்காளர்களுக்கு மாதம் ரூ.2,000 ஊதியம் வழங்கப்படுவதாகவும், சில நேரங்களில் 6 அல்லது 10 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே சம்பளம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக தர்மபுரி மாவட்டத்தில் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தின் சில மாவட்டங்களில் மகளிர் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக வெளியான தகவல்களை பயன்படுத்தி, சிலர் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் பெண் கணக்காளர்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

வங்கி பரிவர்த்தனை விவரங்கள், கடன் பதிவேடுகள் மற்றும் அரசு சலுகைகள் தொடர்பான ஆவணங்களை மாலை நேரத்துக்குப் பிறகு தனியாக வந்து ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.
அதற்கு மறுப்பு தெரிவித்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிப்பதாகவும், சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் தகவல்களை வெளியிடுவதாகவும் மிரட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் பெண் ஊழியர்கள் அச்சத்தில் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் முத்துகுமாரசுவாமி கூறுகையில், கடன் வழங்கல் மற்றும் வசூல் விவரங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தணிக்கை செய்யப்படுவதாகவும், தேவையான தகவல்களை உரிய நடைமுறைப்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
பெண் கணக்காளர்களை தனியாக வரவழைத்து ஆவணங்களை கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றும், மிரட்டல் தொடர்பான தகவல்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். புகார் உறுதியானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘தோழி’ மகளிர் விடுதி! சமூக நலத்துறை - பொதுப்பணித்துறை இடையே புதிய சர்ச்சை! தமிழக அரசு துறைகளுக்குள் புதிய விவாதம்!