நீட்-யுஜி உள்ளிட்ட முக்கிய போட்டித் தேர்வுகளில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்தக் கோரிக்கையை முன்வைத்து ‘கரப்பான் பூச்சி ஜனதா’ (Cockroach Janta Party - CJP) அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி நான்கு நாட்களுக்கும் மேலாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றுள்ள இந்தப் போராட்டத்துக்கு விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதே கோரிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் (டிவிட்டர்) பதிவில் கடுமையான விமர்சனம் முன்வைத்துள்ளார். “வினாத்தாள் கசிவுகள் தொடர்ந்து நிகழ்ந்துள்ளன. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சீரழிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். பல குடும்பங்கள் நிலைகுலைந்து போயுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: ஜூன் 11 அன்று புனேவில் களமிறங்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!

மேலும், அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ஒட்டிக்கொண்டிருப்பதாகவும், மாணவர்களின் குரலை ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்திப் பேசுவதாகவும் கார்கே குற்றம் சாட்டினார். “மாணவர்களின் குரல் நாடு முழுவதும் உரக்க ஒலிக்கும். மோடி அரசின் அமைச்சர் பிரதான் பதவி விலகியே தீர வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்பு விவசாயிகளின் போராட்டத்தின்போது பிரதமர் மோடி அவர்களை ‘ஆர்ப்பாட்டங்களில் வாழ்வோர்’ மற்றும் ‘ஒட்டுண்ணிகள்’ என்று வர்ணித்தது நாடு மறக்கவில்லை என்றும் கார்கே சுட்டிக்காட்டினார். அரசை கேள்வி கேட்பவர்கள் அனைவரையும் ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்தும் போக்கு தொடர்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
நீட்-2026 தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு முறைகேடுகள் தொடர்பான விசாரணை முழுமையாக நடைபெற வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: விஜய், பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவார்..!! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை..!!