சென்னையில் வசிக்கும் ஒடிசா மக்களின் முக்கிய அமைப்பான தி உத்கல் அசோசியேஷன் மெட்ராஸ் சார்பில் ஒடிசா தினத்தை முன்னிட்டு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் கலையரங்கில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ஜனநாயகத்தில் மக்களே முக்கியப் பங்கு வகிப்பவர்கள் என்று வலியுறுத்தினார். “தங்களை யார் ஆள வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். பாஜகவின் வெற்றிக்குப் பின்னால் மக்களின் பேராதரவு உள்ளது” என்று கூறினார்.

தமிழ்நாட்டில் திமுக மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் காரணமாக நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், அதனால் ஏற்பட்ட விரக்தியில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் விமர்சித்தார். கல்வித் துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் அவர் விரிவாகப் பேசினார். சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார். சென்னை மற்றும் கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் இந்தக் கோளாறை முற்றிலுமாகத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள்கள் விரைவில் வழங்கப்படும். அதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் வெளிநாட்டு மொழிக் கல்வி விரிவாக்கம்..!! மத்திய அரசின் கல்வித்துறை முயற்சி..!!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை வரவேற்ற அமைச்சர், புதிய முதலமைச்சர் விஜய் பதவியேற்றதை பாராட்டினார். “முதலமைச்சர் விஜயின் தலைமையிலான அரசு, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணக்கமாக இணைந்து செயல்படும் என்று நம்புகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி ஆற்றும் பங்களிப்பு மகத்தானது” என்று குறிப்பிட்டார். பி.எம்.ஸ்ரீ உள்ளிட்ட மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகள் குறித்தும் அவர் விமர்சனம் செய்தார். “மக்களின் நிராகரிப்பால் காங்கிரஸ் தலைவர்கள் விரக்தியில் உள்ளனர். ராகுல் காந்தி தன்னை ஜமீன்தாரராக நாட்டை ஆளலாம் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார். ஆனால் மக்களின் தீர்ப்பு வேறு மாதிரியாக உள்ளது” என்று சுட்டிக்காட்டினார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் சிபிஐ விசாரணையில் உள்ளதாகவும், விசாரணை முடிவுக்குப் பின்னரே முழு விவரங்கள் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.
தமிழக வெற்றி கழக அரசில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக ராஜ் மோகன் பொறுப்பேற்றுள்ள நிலையில், இருமொழிக் கொள்கை குறித்து புதிய அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தச் சூழலில், மத்திய அரசின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என்றும், இருமொழிக் கொள்கையில் தவெக உறுதியாக உள்ளது என்றும் ராஜ் மோகன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பாகவும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2027ம் ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு..!! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு..!!