சிறுமிக்கு எதிரான கொடூரப் பாலியல் அத்துமீறல் புகாரில் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி அண்மையில் கலந்துகொண்ட ஒரு பொது நிகழ்ச்சியில், ஆளும்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றிருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவர்கள் எல்லாம் தெரிந்தே அவருடன் மேடையைப் பகிர்ந்துகொண்டார்களா அல்லது அவரது கொடூரக் குற்றச்செயல்களை மூடி மறைக்கத் துணை நின்றார்களா என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், போக்சோ வழக்கில் சிக்கியுள்ள ஜெம் வீரமணி விவகாரத்தில் ஆளும்கட்சியினரின் அணுகுமுறையைக் கடுமையாகச் சாடினார். சமூகத்தில் பெரும் தொழிலதிபராக வலம் வந்த ஜெம் வீரமணி மீது பிஞ்சுக் குழந்தைகளுக்கு எதிரான அதிர்ச்சியூட்டும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் கலந்துகொண்ட நிகழ்வுகளில் தவெக அரசின் முக்கிய அமைச்சர்கள் வரிசையாகப் பங்கேற்று அவருடன் நெருக்கம் காட்டியது எதேச்சையானதா அல்லது அவரது முறைகேடான நடவடிக்கைகளைத் தங்களது அதிகார பலத்தைப் பயன்படுத்தி மூடி மறைப்பதற்கான நாடகமா? அமைச்சர்கள் இதில் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தப்பிக்க முடியாது என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: தவெகவிடம் ஏன் இந்த கள்ளத்தனம்? ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு எம்.பி சுப்பராயன் கேள்வி!
மேலும், தவெக அரசின் இரட்டை வேடத்தைத் தோலுரித்த அவர், "பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூகநீதி குறித்து மேடைக்கு மேடை வீர வசனம் பேசும் தவெக ஆட்சியில், இதுபோன்ற கொடூரக் குற்றவாளிகளோடு அமைச்சர்கள் நட்பு பாராட்டுவது தமிழகத்திற்கே மாபெரும் தலைகுனிவாகும். எதிர்க்கட்சிகள் மீது பாய்ந்து பாய்ந்து அவதூறுகளை அள்ளி வீசும் ஆளும்கட்சியினர், தங்களது அமைச்சர்கள் எதற்காக அத்தகைய நபருடன் மேடைகளைப் பகிர்ந்தார்கள் என்பதற்கு முதலில் மக்கள் மன்றத்தில் வெளிப்படையாகப் பதில் சொல்ல வேண்டும். போக்சோ வழக்குகளில் கூடக் கட்சிப் பாகுபாடின்றி சமரசம் பேசி வழக்கை முடிக்க முயலும் விபரீத கலாச்சாரம் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. எனவே, முதலமைச்சர் விஜய் அவர்கள் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் எத்தகைய அதிகாரப் பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றித் தயவுதாட்சண்யமற்ற கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: "கள்" பொது சுகாதாரத்திற்கு தீங்கா.? விவசாய விரோதம்..! நயினார் கண்டனம்.!!