சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கிண்டி ரயில் நிலையத்தில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரையில் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் குறிப்பிட்ட இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதி மக்களின் உயிர்நாடியாக விளங்கும் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் தண்டவாளங்களைச் சீரமைக்கும் நோக்கில், எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் அமைந்துள்ள கிண்டி ரயில் நிலையப் பகுதியில் பொறியியல் மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளத் தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதன்படி, நாளை முதல் வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி வரையில் நள்ளிரவு 12.15 மணி முதல் அதிகாலை 2.45 மணி வரை (சுமார் 2 மணி நேரம் 30 நிமிடங்கள்) தினசரி தொடர் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக அப்பாதையில் இயக்கப்படும் குறிப்பிட்ட மின்சார ரயில் சேவைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை கடற்கரையில் இருந்து நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற அக்டோபர் 3-ஆம் தேதி வரையில் இரவு 11.59 மணிக்குப் புறப்பட்டுத் தாம்பரம் நோக்கிச் செல்லும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்! எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே தீவிர ஏற்பாடு!
அதேபோல், தாம்பரத்தில் இருந்து நாளை (26-ஆம் தேதி) மற்றும் செப்டம்பர் 28, 29, 30, அக்டோபர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் இரவு 8.45 மணிக்குப் புறப்பட்டுச் சென்னை கடற்கரை நோக்கி வரும் புறநகர் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தாம்பரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.40 மணிக்குப் புறப்பட்டுச் சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் சேவை மாற்றங்களால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, இரவு நேரங்களில் பயணிக்கும் பயணிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் அன்போடு கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! சென்னை-போத்தனூர், தாம்பரம்-தென்காசி ரயில்கள் இயக்கம்!