தமிழகத்தில் தேர்தல் ஜுரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேமுதிகவின் கோட்டையான கோயம்பேடு ‘கேப்டன் ஆலயம்’ அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்குத் தயாராகிவிட்டது. 2026 தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனுக்கள் விநியோகம் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது நேர்காணல் தேதிகளைத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி (20.02.2026) தொடங்கி பிப்ரவரி 22-ஆம் தேதி (22.02.2026) வரை மூன்று நாட்களுக்குத் தலைமை அலுவலகத்தில் வைத்து நேர்காணல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று நாள் நேர்காணல் படலத்தில், விருப்பமனு அளித்த நிர்வாகிகளிடம் தொகுதி நிலவரம், தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்துப் பிரேமலதா விஜயகாந்த் நேரடியாக நேர்காணல் நடத்த உள்ளார். விஜயகாந்த் மறைவிற்குப் பின் வரும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், தொண்டர்களிடையே காணப்படும் எழுச்சியை வாக்குகளாக மாற்றும் வல்லமை கொண்ட வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் தலைமை மிகத் தீவிரமாக உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட வாரியாகப் பிரிக்கப்பட்டு நடைபெறும் இந்த நேர்காணலுக்காகத் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் சென்னை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: “முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத் கைவிடுக!” உப்பளத் தொழிலாளர்களுக்காக தேமுதிக அறிக்கை!
தேர்தல் நெருங்கும் வேளையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேர்காணல் அட்டவணை, தேமுதிக ஆக்டிவ் மோடுக்கு வந்துவிட்டதை உறுதிபடுத்தியுள்ளது. கேப்டன் வழியில் மக்கள் பணி செய்யத் துடிக்கும் உண்மைத் தொண்டர்களுக்கு இந்த தேர்தலில் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என ஏற்கனவே பிரேமலதா தெரிவித்திருந்த நிலையில், இந்த நேர்காணல் முடிவுற்றதும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் திரைமறைவில் நடந்தாலும், களப்பணிகளை முடுக்கிவிடுவதில் தேமுதிக தலைமை காட்டும் இந்த வேகம் மற்ற அரசியல் கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: தேமுதிக விருப்ப மனு விநியோகம் இன்று தொடக்கம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு தீவிரம்!