தமிழக அரசியலில் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் தேமுதிக இடையேயான சந்திப்பு இன்று பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேமுதிக நிறுவனத் தலைவர் 'கேப்டன்' விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜை விழா வரும் டிசம்பர் 28-ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்குச் சென்ற தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், குருபூஜை நிகழ்விற்கான அழைப்பிதழை வழங்கினர்.
இந்தச் சந்திப்பின்போது இரு கட்சித் தலைவர்களும் சிறிது நேரம் அரசியல் சூழல் குறித்துக் கலந்துரையாடியதாகத் தெரிகிறது. கடந்த சில தேர்தல்களில் அதிமுக - தேமுதிக கூட்டணித் தொடர்பாகப் பல்வேறு இழுபறிகள் நீடித்த நிலையில், தற்போது விஜயகாந்தின் குருபூஜைக்காக விடுக்கப்பட்டுள்ள இந்த நேரடி அழைப்பு, இரு கட்சிகளுக்கும் இடையேயான நட்புறவை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, சமீபத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகியுள்ள சூழலில், தேமுதிக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.
விஜயகாந்தின் நினைவிடத்தில் நடைபெறவுள்ள இந்தக் குருபூஜை நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. "கேப்டன் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி அவர்கள், இந்த அழைப்பை ஏற்றுத் தனது அஞ்சலியைச் செலுத்துவார்" என அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களிலும், அரசியல் மேடைகளிலும் 2026 கூட்டணி குறித்த யூகங்கள் வலுத்து வரும் நிலையில், இந்த 'நேரில் சந்திப்பு' நிகழ்வு ஒரு புதிய அரசியல் அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "விஜய் ஒருத்தரால தான் முடியும்!" அதிமுக டூ தவெக.. மொத்தமா களமிறங்கும் புள்ளிகள்!
இதையும் படிங்க: “பாஜகவிடம் மண்டியிடும் எடப்பாடி.. அதிமுக டெபாசிட் காலியாகும்!” - வெளுத்து வாங்கிய பெங்களூரு புகழேந்தி!