மதுராந்தகத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: இதுபோன்ற துரோகத்தைத்தான் முதன்முறையாக தமிழ்நாட்டில் பார்க்கிறோம். இந்த இடைத்தேர்தல் முழுவதும் துரோகத்தின் அடையாளம்தானே தவிர, வேறு எதுவும் இங்கு சொல்வதற்கு இல்லை.
இன்றைக்கு அவர் சார்ந்த அந்தக் கட்சியில் ராஜினாமா செய்துவிட்டு, இந்தத் தேர்தலில் நிற்க வேண்டிய அவசியம் என்ன? பத்து நாளில் என்னத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்கள்? பத்து நாளில் என்னத்தைப் பார்த்துவிட்டு, இன்றைக்கு இன்னொரு கட்சிக்குப் போகிறீர்கள்?
இன்றைக்கு இந்த இடைத்தேர்தல் வருகிறது. நிச்சயமாக நேரம் வீணாகிறது, காசு வீணாகிறது. அத்தனை பேருடைய உழைப்பும் இங்கு வீணாகிறது. இதற்கு யார் பொறுப்பு?
இதையும் படிங்க: பிரச்சாரப் பந்தலை கூட பிரிக்கல... மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி வன்கொடுமை. ! முதல்வரை சாடிய EPS..!!
தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகளே, உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். மதுராந்தகம் தொகுதி மக்கள் சார்பாக தேர்தல் அதிகாரிகளைப் பார்த்து நான் கேட்டுக்கொள்கிறேன்.
இனி ஒரு காலத்தில், தாங்கள் சார்ந்த கட்சியில் வெற்றி பெற்ற பிறகு எந்தக் காரணமும் இல்லாமல் யாராவது ஒருவர் ராஜினாமா செய்தாலோ, கட்சியை விட்டு வேறு கட்சிக்குத் தாவினாலோ, நிச்சயமாக தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்தவர்கள், இந்தத் தேர்தலுக்கான முழுச் செலவையும் அந்த வேட்பாளர்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்த வேட்பாளராக இருந்தாலும், முழுச் செலவையும் அந்த வேட்பாளரிடமிருந்துதான் நீங்கள் வசூலிக்க வேண்டும். ஏனென்றால், இன்றைக்கு மக்கள் வரிப்பணம் வீணாகிறது.
இந்தத் தேர்தலை நடத்துவதற்கு குறைந்தது 5 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை செலவாகிறது. தேர்தல் ஆணையத்துக்கு செலவாகும் இந்தப் பணம் யாருடையது? மக்களுடைய வரிப்பணம். மக்கள் அன்றாடம் வியர்வை சிந்தி சம்பாதித்த பணம்.
இதுபோன்ற துரோகிகளுக்காக ஒரு தேர்தல் தேவையா என்ற கேள்வியை மக்கள் சார்பாக நான் கேட்கிறேன். ஓட்டு போட்டு பத்து நாளில் என்னத்தைப் பார்த்துவிட்டீர்கள்? இன்றைக்கு இன்னொரு கட்சிக்குப் போகிறீர்கள். எதற்காகப் போகிறீர்கள்? உங்களுக்கு வெட்கம், சூடு, சொரணை என எதுவுமே இல்லையா என்பதை நான் கேட்கிறேன்.
நான் கேட்கிறேன். அவர்களும் ஒரு பெண்தான், நானும் ஒரு பெண்தான். எந்தக் கட்சிக்காக நீங்கள் இருந்து, எந்தக் கட்சி உங்களுக்காக உழைத்து, உங்களை வெற்றி பெறச் செய்ததோ, அந்தக் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டு செல்கிறீர்கள் என்றால், ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளமாகத்தான் மதுராந்தகம் மக்கள் உங்களைப் பார்ப்பார்களே தவிர, வேறு எதுவுமாக உங்களைப் பார்க்க மாட்டார்கள்.
நான்தான் டிவியில் தினமும் பார்க்கிறேன். ஒரு ஊரில்கூட உங்களால் உங்கள் முகத்தைக் காட்டிக்கொண்டு போய் ஓட்டு கேட்க முடிகிறதா? ஓட்டு கேட்க முடிகிறதா?
எங்கு போனாலும் மக்கள் ஓட ஓட அடித்து விரட்டுகிறார்கள். “எதற்காக எங்களிடம் ஓட்டு கேட்டு, துரோகம் செய்துவிட்டு, எந்த முகத்தை வைத்துக்கொண்டு எங்களிடம் வந்து ஓட்டு கேட்கிறாய்?” என்று மக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்.
உங்களை எல்லாம் கேட்டுக்கொள்வது இதுதான். ஓட ஓட விரட்டுவது மட்டுமல்ல, தேர்தலில் நிச்சயமாக உங்கள் வாக்குகளையும் பயன்படுத்தி அவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: ஆரோவில் சுதந்திரத்தில் அதிகாரம்.. சர்வதேச நகரமா.? மதவாத வேட்டைக்காடா..? வேல்முருகன் ஆவேசம்.!!