சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, திமுக - காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜகவின் இந்தித் திணிப்பு முயற்சி குறித்து ஆவேசமாக உரையாற்றினார்.
கூட்டணி மற்றும் கனிமொழி - ராகுல் சந்திப்பு குறித்தும், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்துப் பேசிய அவர், திமுகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே சில நேரங்களில் நெருடல் இருப்பது போலத் தோன்றலாம். ஆனால் அது நீர் விடுத்த வடு போல உடனடியாக மறைந்து போகும். இந்தக் கூட்டணி இரும்புக்கோட்டை போன்றது என உறுதிப்படத் தெரிவித்தார். டெல்லியில் ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்தது கூட்டணி உறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு நேர்மறையான நடவடிக்கை; இதில் எவ்விதச் சிக்கலும் இல்லை.
பாஜகவினரால் அதிமுகவும், அக்கட்சியின் தலைவர்களும் எவ்வளவு அவமானப்படுத்தப்பட்டாலும் அதைச் சகித்துக் கொண்டு அடிபணிந்து நின்றவர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு கனிமொழி - ராகுல் சந்திப்பு குறித்துப் பேச எவ்விதத் தகுதியும் இல்லை எனச் சாடினார். அதிமுக ஆட்சிக் காலத்தை விடத் தற்போது பெண்களுக்கு எதிரானக் குற்றங்கள் குறைவாகவே உள்ளன. மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் இத்தகையச் சம்பவங்களில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருகிறார். திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் தனது வரம்புகளை மீறிச் செயல்பட்டுவிட்டார். அவரது தீர்ப்பை விமர்சிப்பதில் தவறில்லை" என்பது தனது கருத்து என வைகோ தெரிவித்தார்.
இதையும் படிங்க: யாருக்கும் பாதுகாப்பு இல்லை! அடையாறு படுகொலை மற்றும் நந்தனம் வன்கொடுமைக்கு தவெக தலைவர் கண்டனம்
பாஜக அரசு அகங்காரத்துடன் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கப் பார்க்கிறது. இந்தித் திணிப்புக்கு எதிராக ராணுவத்தையே எதிர்கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்பதை அவர்கள் மறக்கக்கூடாது. மீறித் திணித்தால் கடும் விளைவுகளைச் சந்திப்பார்கள்.
வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்குப் பெரிய அளவில் நிதி ஒதுக்கப்படாது; ஓரவஞ்சனை நிச்சயம் நடக்கும். பிரதமரின் வெற்றுப் புகழாரங்கள் மற்றும் தமிழ் மேற்கோள்கள் மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என முதல்வர் கூறியிருப்பதை வழிமொழிந்த வைகோ, மதிமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் சின்னம் குறித்துத் திமுக தலைமையுடன் பேசிப் பின் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "திமுக கோட்டைக்கு விடுக்கப்பட்ட சவால்!" – ராயப்பேட்டையில் தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் அதிரடி தீர்மானங்கள்