தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல், தற்போது நாட்டின் நாடாளுமன்றம் வரை எட்டியுள்ளது. மக்களவையில் திமுக எம்.பி-க்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இருக்கை வரிசையை மாற்றக் கோரி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி-யுமான கனிமொழி கருணாநிதி மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கனிமொழி கருணாநிதி சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முக்கியக் காரணங்கள் மாறிவரும் அரசியல் சூழலில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடனான திமுக-வின் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, நாடாளுமன்ற அவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து அமர்ந்திருக்கும் தற்போதைய இருக்கை ஏற்பாடு இனிப் பொருத்தமாக இருக்காது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமைகளைச் செம்மையாகச் செய்ய ஏதுவாக, அவர்களுக்குத் தனியாக இருக்கைகளை ஒதுக்கித் தர வேண்டும்" என அவர் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக-விற்கு எதிராகச் செயல்பட்டதாகவும், தற்போது ஆட்சி அமைப்பதில் தவெக-விற்கு ஆதரவளித்து வருவதாகவும் திமுக கருதுகிறது. இதன் வெளிப்பாடாகவே, நாடாளுமன்றத்திலும் காங்கிரஸுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்த திமுக இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: "118 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்கலாம் - ஆளுநர் அர்லேகர் அதிரடி!
ஏற்கனவே தமிழகத்தில் திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் காங்கிரஸுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், டெல்லியிலும் அந்த விரிசல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் மெகா கூட்டணியாகச் செயல்பட்ட 'இந்தியா' (I.N.D.I.A) கூட்டணியில் ஏற்பட்ட இந்தத் திடீர் பிளவு தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "திமுக முடிவே எங்களது முடிவு": விஜய்யின் ஆதரவு கோரிக்கைக்குக் காதர் மொய்தீன் பதில்!