தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்று நடத்தவிருந்த குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வுகள் நிர்வாகக் குளறுபடிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அரசுப் பணி என்பது ஒவ்வொரு இளைஞரின் உயரிய கனவு மற்றும் லட்சியமாகும். இதற்காகப் பல ஆண்டுகளாக இரவு பகலாகக் கஷ்டப்பட்டுப் படித்து, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்களின் நம்பிக்கையை இந்த அரசு சிதைத்துவிட்டதாக விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்வு ரத்து செய்யப்படுவதால் இளைஞர்களின் பெறற்கரியக் காலம் வீணாவதுடன், அவர்கள் மனத்தளவில் பெரும் பாதிப்பைச் சந்திக்கின்றனர். ரத்து செய்யப்பட்டத் தேர்வால், மாணவர்கள் தங்களதுக் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்க வேண்டியச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது 'வெற்று விளம்பர மாடல்' அரசின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது.
இதையும் படிங்க: விஜய்யின் எழுச்சி திமுக-விற்கு பாதிப்பு; என்டிஏ-விற்கு சாதகம்! - டிடிவி தினகரன் அதிரடி!
ஏற்கனவே நகராட்சித் துறை வேலைவாய்ப்புத் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் வெளிவந்துள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் குளறுபடிக்குப் பின்னால் ஏதோ ஒரு மிகப் பெரிய முறைகேடு ஒளிந்திருப்பதாக விஜய் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
எந்தப் பெரிய ஊழலை மறைக்க இந்தத் தேர்வு ரத்து நடந்தது என்ற ஐயம் எழுகிறது. இதன் பின்னணியில் உள்ள உண்மையை நேர்மையாகச் சொல்ல வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. கபட நாடகங்கள் மூலம் உண்மையை மறைக்க முயலக் கூடாது.
இளைஞர்களுக்குப் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்காத இந்த அரசு இருந்து என்ன பயன்? எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், வரும் காலங்களில் இத்தகையத் தவறுகள் நிகழாவண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
விளம்பரத்தினால் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் இந்த திமுக அரசுக்கு, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் இளைஞர் பட்டாளம் ஜனநாயக முறைப்படித் தக்கப் பாடம் புகட்டுவது உறுதி என அவர் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: குரூப் 2 தேர்வு ரத்து: இது ஒரு கையாலாகாத அரசு! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!