ஒரு கடைக்குச் சென்றால் 'உங்கள் பொருளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல' என்று போர்டு எழுதியிருப்பார்கள்; அதேபோலத்தான் தற்போதைய தவெக ஆட்சியும் உள்ளது. புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ளதா இல்லையா என்றே தெரியவில்லை என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி எம்.பி மிகக் காட்டமாகத் தவெக அரசைச் சாடியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 103-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேர்தல் களத்தில் அயராது பணியாற்றிய மகளிரைக் கௌரவிக்கும் வகையில், திமுக மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட சிறப்புப் பொதுக்கூட்டங்கள் இன்று நடத்தப்பட்டன. சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான முதன்மை விழாவில் கலந்துகொண்டு அனல் பறக்க உரையாற்றிய கனிமொழி எம்பி, புதிய தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பேசியதாவது:
ஏன் கலைஞர் பிறந்தநாளில் தேர்தல் களத்தில் தங்களது வியர்வையைச் சிந்திய உழைக்கும் மகளிருக்காக இந்நாளினைக் கொண்டாடுகிறோம் என்றால், பெண்களின் உரிமைக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் கலைஞர். தந்தை பெரியார் எப்படிப் பெண்கள் குறித்து இந்தச் சமூகம் கட்டியிருந்த இரும்பு வேலிகளை உடைத்துக்கொண்டு பெண்கள் முன்னேற வேண்டும் என்று சொன்னாரோ, அதனைத் தன் அசாத்திய ஆட்சி அதிகாரத்தின் மூலம் சட்டம் இயற்றிச் செயல்படுத்திக் காட்டியவர் கலைஞர். பொதுவாகப் பெண்களை வெளியில் யாரும் எளிதில் பாராட்ட மாட்டார்கள்; எனவே நம்மை நாமே பாராட்டிக் கொள்வோம் என்றுதான் தமிழ்நாடு முழுவதும் மகளிர் அணி சார்பில் இந்த நெகிழ்ச்சியான நிகழ்ச்சியை நடத்துகிறோம். பெண்களின் சொத்துரிமை, கல்வி உரிமை பற்றிப் பேச யாரும் தயாராக இல்லாத காலத்தில், பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் சம உரிமை உண்டு எனச் சட்டப் பாதுகாப்பு உருவாக்கித் தந்தவர் கலைஞர். சின்னஞ்சிறு கிராமங்களிலும் அவர் பள்ளிக்கூடங்களை அமைக்கவில்லை என்றால், இன்றைக்குத் தமிழ்நாட்டுப் பெண்கள் இவ்வளவு தூரம் படித்திருக்க மாட்டார்கள். சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் படைத்தவர்களாகப் பெண்கள் திகழ வேண்டும் என அரசுப் பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முதன்முதலில் உருவாக்கித் தந்தவர் கலைஞர்; அதனை மேலும் அதிகப்படுத்தித் தந்தவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதையும் படிங்க: வாக்குறுதியை நிறைவேற்றுங்க... சட்டம் ஒழுங்கை சீராக்குங்க! தேமுதிக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானங்கள்!

புதிய தவெக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விகளைத் தனது பேச்சில் மிகக் கடுமையாகப் பட்டியலிட்ட கனிமொழி எம்பி, "கடந்த ஆட்சிக் காலங்களில் பெண்களுக்கான அசல் மாற்றத்திற்கான திராவிட மாடல் ஆட்சியை நாம் வெற்றிகரமாக நடத்தினோம். தமிழகத்தில் தற்பொழுது என்னதான் அரசியல் சூழலில் ஆட்சி மாற்றம் வந்திருந்தாலும், அதைப்பற்றி நான் எள்ளளவும் கண்டுகொள்ள மாட்டேன். ஆனால், ஒரு புதிய அரசு என்றால் சட்டம் ஒழுங்கிற்கும் மக்களின் பாதுகாப்புக்கும் முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். புதிய தவெக ஆட்சி அமைந்து இந்த ஒரே மாதத்திற்குள் மட்டும் மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட கொடூரக் கொலைகளும், பிஞ்சுப் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இப்போது ஆட்சியில் உள்ளவர்களிடம் நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான்; தயவுசெய்து எதற்கெடுத்தாலும் முந்தைய ஆட்சியின் மீது பழி போடாமல், நீங்கள் முதலில் இந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்! காரணங்களை யார் மீது சொல்லலாம், தாங்கள் செய்யத் தவறிய விஷயங்களில் யார் மீது பழியை மாற்றித் தப்பிக்கலாம் என்று தேடிக் கொண்டே இருந்தால் அது மிகச் சுலபமான வேலை. ஆனால், எது நடந்தாலும் யார் மீதும் பழி போடாமல் பொறுப்பேற்றுத் திறம்பட ஆட்சி நடத்தியவர் கலைஞர் கருணாநிதி; அதே நேர்மையான வழியில்தான் மு.க.ஸ்டாலினும் ஆட்சி நடத்தினார். ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தன் வாழ்நாள் முழுவதும் இன்று வரை தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் போக்கையும், சமூக நீதிப் பாதையையும் தீர்மானிக்கின்ற ஒரே உன்னத தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் மட்டும்தான்" என்று அனல் பறக்கப் பேசி தவெக அரசை முழுமையாக உலுக்கியுள்ளார்.
இதையும் படிங்க: 15 நாளில் 45 கொலைகள், 74 கற்பழிப்புகள்! முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் கடுமையான குற்றச்சாட்டு!