தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் முறையாக பெண் சபாநாயகரை நியமிக்கும் வாய்ப்பை தி.மு.க. தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தி.மு.க. கூட்டணியின் வெற்றியை சுட்டிக்காட்டுகின்றன. உளவுத்துறை அறிக்கையும் தி.மு.க. கூட்டணி 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.
ஓட்டு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், புதிய அமைச்சரவை அமைப்பு மற்றும் சபாநாயகர் தேர்வு குறித்து தி.மு.க. தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: இடதுசாரிகளுக்கான அங்கீகாரத்தை திமுக தர மறுத்தது! கூட்டணிக்கும் மனக்கசப்பு? CPI(M) குற்றச்சாட்டு?!
மூத்த அமைச்சர் துரைமுருகன் அல்லது அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சபாநாயகர் பதவி வழங்கலாம் என ஒரு தரப்பில் ஆலோசனை நடைபெறுகிறது.

குறிப்பாக பன்னீர்செல்வத்தை சபாநாயகராக்கினால், அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வரும்போதெல்லாம் அவருக்கு வணக்கம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும் என்பது ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
ஆனால், மற்றொரு முக்கிய ஆலோசனையும் முன்னுக்கு வருகிறது. லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக பா.ஜ.க. தி.மு.க.வை மகளிர் விரோதக் கட்சி என விமர்சித்து வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டை முறியடிக்க தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக பெண் சபாநாயகரை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் தீவிரம் காட்டுவதாக தெரிகிறது.
இதில் தற்போதைய அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் முன்னாள் அமைச்சர் தமிழரசி ஆகியோருக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பெண் சபாநாயகர் நியமனம் மூலம் தி.மு.க. தனது முற்போக்கு முகத்தை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாலும், இந்த ஆலோசனை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஓட்டு மெஷினை காவல் காப்பதில் சுணக்கம்! கோட்டை விடும் தவெக வேட்பாளர்கள்! புது புகார்!