காவிரி நீர் உரிமைப் போராட்டத்தை அடுத்துக் கைது செய்யப்பட்ட சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தஞ்சை நகருக்குள் இருக்கும் தெற்கு காவல் நிலையத்திற்குப் பதிலாகச் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறிது நேர ஆலோசனைக்குப் பின் நிலையத்திற்குள் நுழைந்துள்ளார்.
முன்னதாகச் சென்னையிலிருந்து கைது செய்து அழைத்து வரப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவே திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், தஞ்சை நகர்ப்புறக் காவல் நிலையம் அருகே ஏராளமான திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விடிய விடிய திரண்டு குவிந்ததால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டு காவல்துறையினர் தங்களது திட்டத்தை அவசரமாக மாற்றினர்.

தஞ்சை நகருக்குள் செல்லாமல் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு வாகனம் திருப்பப்பட்டதால், செங்கிப்பட்டி நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்ட காவல் வாகனத்திலேயே உதயநிதி ஸ்டாலின் நீண்ட நேரம் காத்திருந்தார். தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துமாறு அவர் வலியுறுத்தியதால், காவல் வாகனத்திலிருந்து இறங்க மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் இல்லாத வேகம் கைதில் ஏன்? முதலமைச்சர் விஜய்யை நோக்கி சீமான் கேள்வி!
இதனிடையே, செங்கிப்பட்டி காவல் நிலையத்தின் வாயிலில் குவிந்த திமுகவினர் காவல்துறையினருடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இதனைத் தொடர்ந்து, காவல் உயர் அதிகாரிகளுடன் சிறிது நேரம் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் காவல் வாகனத்திலிருந்து கீழே இறங்கினார். காவல் நிலைய வாயிலில் திரண்டிருந்த திமுக தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்து, திரும்பி வந்து உங்களைச் சந்திக்கிறேன் எனச் சைகை காட்டியபடி அவர் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் நுழைந்தார்.
இதையும் படிங்க: ஒரு வார்த்தைக்கு 9 பிரிவா.? இதெல்லாம் நியாயமா CM விஜய்..? கிருஷ்ணசாமி சரமாரி கேள்வி..!!