தி.மு.க. கூட்டணியில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியில் (வி.சி.க.) உருவாகியுள்ள அதிருப்தி அலை அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வி.சி.க.வில் அதிருப்தியடைந்த சில முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் இணைய விருப்பம் தெரிவித்திருந்தாலும், தற்போதைக்கு அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டாம் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய சட்டசபை தேர்தலில் வி.சி.க. எட்டு தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த ஆளூர் ஷா நவாஸ், எஸ்.எஸ். பாலாஜி மற்றும் பனையூர் பாபு ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், எஸ்.எஸ். பாலாஜிக்கு கட்சி பொருளாளர் பொறுப்பு வழங்கப்பட்டதால் அவர் மீண்டும் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

மறுபுறம், ஆளூர் ஷா நவாஸ் கட்சி நடவடிக்கைகளில் முன்பைப் போல ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில், கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் செயல்பாடுகளில் அதிருப்தி இருப்பதாக தெரிவித்து பனையூர் பாபு வி.சி.க.விலிருந்து விலகியுள்ளார். அவர் விரைவில் தி.மு.க.வில் இணையக்கூடும் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: பொதுச்செயலாளர் பதவி வேண்டாம்! துரைமுருகன் திடீர் ட்விஸ்ட்! திமுகவில் அடுத்த பூகம்பம்!!
மேலும், தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் வி.சி.க. இடம்பெற்றிருப்பது கட்சியின் சில நிர்வாகிகளுக்கு விருப்பமில்லாத ஒன்றாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் மாற்றுக் கட்சிகளை நோக்கி நகரத் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் வி.சி.க. தலைமையுடன் நேரடி மோதலை உருவாக்க தி.மு.க. விரும்பவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக எதிர்வரும் இடைத்தேர்தல்களை கருத்தில் கொண்டு கூட்டணி உறவை பாதிக்கக்கூடிய எந்த நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தி.மு.க. இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். இதன் காரணமாக, வி.சி.க.வில் இருந்து விலக விரும்பும் சிலர் தி.மு.க.வில் இணைய காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: குழந்தைகளை வைத்து பிரச்சாரமா.? என்ன நடந்துச்சு.? தவெக, தேர்தல் ஆணையத்துக்கு பறந்த உத்தரவு..!!