நெல்லையில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வருகை தந்தார். திருமண நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் மீதான தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர் பேசுகையில், "தமிழகத்தில் இன்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள் என அனைத்துத் தரப்பு உழைக்கும் வர்க்கமும் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்கும் தூய்மைப் பணியாளர்களையும், ஆசிரியர்களையும் இந்த திமுக அரசு ஒரு சர்வாதிகாரியைப் போலக் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. 15,000 செவிலியர்களுக்கு வேலை என்று வாக்குறுதி கொடுத்தார்கள், ஆனால் இன்றுவரை ஒன்றும் நடக்கவில்லை" எனச் சாடினார்.
தமிழகத்தின் பொருளாதார நிலை மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்துப் பேசிய அன்புமணி, "திமுக அரசு வெறும் கடனை வாங்கித்தான் நிர்வாகத்தை நடத்தி வருகிறது. மின்சாரத்தைத் தயாரிப்பதற்குப் பதிலாக, லஞ்சம் வாங்குவதற்காகவே மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்குகிறார்கள். குறிப்பாகத் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மற்றும் நெல்லையில் கனிமவளக் கொள்ளை கட்டுக்கடங்காமல் நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது திமுக-விற்கு எதிராக எழுந்துள்ள அலை, விரைவில் அந்த அரசை வீழ்த்தும் சுனாமியாக மாறும்" என எச்சரித்தார். மேலும், இன்னும் இரண்டு வாரங்களில் தங்களது கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், அது நிச்சயம் ஒரு 'மெகா கூட்டணி'யாக அமையும் என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் போலி வாக்காளர்கள் என சுமார் 97 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை நான் முழுமையாக வரவேற்கிறேன். இது ஒரு நேர்மையான தேர்தல் நடைபெற வழிவகுக்கும்" என்றார். கூட்டணி ஆட்சியை விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, "முதலில் திருமணம் நடக்கட்டும், அதற்குள் குழந்தைக்குப் பெயர் வைக்கத் துடிக்கிறீர்கள்" எனத் தனது பாணியில் நக்கலாகப் பதிலளித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையிலான அல்லது பாமக அங்கம் வகிக்கும் மெகா கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என அவர் நம்பிக்கையோடு தெரிவித்தார்.
இதையும் படிங்க: பழைய கணக்கை வைத்து சமூகநீதியை நிலைநாட்ட முடியாது - அன்புமணி ராமதாஸ் அதிரடி!
இதையும் படிங்க: ராமதாஸ் தலைமையில் சேலம் பொதுக்குழு உறுதி! - அன்புமணி தரப்புக்கு ஜி.கே.மணி பதிலடி!