நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்ட தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் ஊழல் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மக்களின் அடிப்படைத் தேவையான போக்குவரத்து வசதியைக் கூட இந்த அரசால் வழங்க முடியவில்லை என அவர் சாடினார்.
ராசிபுரம் பகுதியின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்துப் பேசிய அண்ணாமலை எல்லோருக்கும் எல்லாம் என்று மேடைதோறும் மார்தட்டிக்கொள்ளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில், ராசிபுரம் பகுதி மக்களுக்கு முறையான பஸ் வசதியைக் கூடச் செய்து தர முடியவில்லை. பல கிராமங்களுக்குப் பேருந்து போக்குவரத்து இல்லாததால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுதான் உங்கள் திராவிட மாடல் வளர்ச்சியா? எனக் கேள்வி எழுப்பினார்.
திமுக குடும்பத்தினர் மீதான ஊழல் புகார்களைச் சுட்டிக்காட்டிய அவர் கோபாலபுரம் குடும்பத்தின் ஊழல் சாம்ராஜ்யம் இன்று ராசிபுரம் வரை பரவி இருக்கிறது. அரசுத் திட்டங்களில் தொடங்கி உள்ளூர் நிர்வாகம் வரை அனைத்திலும் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என திமுகவினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மக்களின் வரிப்பணம் மக்கள் நலனுக்குப் பயன்படாமல் ஒரு குடும்பத்தின் கல்லாவை நிரப்பவே பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: உடல்நலம் தேறி வருகிறேன், விரைவில் களத்திற்குத் திரும்புவேன்! வானதி சீனிவாசன் உருக்கமான வீடியோ!

தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி விட்டு, ஆட்சியில் அமர்ந்ததும் மக்களை மறப்பதே திமுகவின் வாடிக்கை. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அறிவித்த திட்டங்களை நேரடியாக மக்களின் வங்கி கணக்கிற்கே கொண்டு சேர்க்கிறது. ஊழலற்ற நேர்மையான ஆட்சி அமையத் தாமரைச் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலை மேற்கொண்ட இந்தச் சாலைப் பயணத்தின் போது, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் அண்ணாமலையின் பேச்சைக் கேட்கப் பெருமளவில் திரண்டிருந்தனர்.
ராசிபுரத்தில் அண்ணாமலை முன்வைத்துள்ள இந்தப் போக்குவரத்து வசதி மற்றும் ஊழல் தொடர்பான புகார்கள், அப்பகுதி தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!