சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் மீது திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ், திமுகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
திவ்யா சத்யராஜ் கூறியதாவது: தவெக தொண்டர்களுக்கு தங்கள் கட்சியின் கொள்கை என்னவென்றே தெரியவில்லை. எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க முடியும் என்ற அடிப்படை விஷயம்கூட அவர்களுக்குத் தெரியாது.
தவெக தலைவர் விஜய் பேப்பரில் எழுதியிருப்பதை மேடையில் தவறுதவறாகப் பேசுகிறார். அவ்வப்போது மறந்தும் போகிறார். அரசியல் மேடையை வெறும் பன்ச் டயலாக் பேசியும், பாட்டு பாடியும் ஓட்டிவிட முடியாது.
இதையும் படிங்க: விஜயின் ஈரோடு மக்கள் சந்திப்பு! த.வெ.க.,வில் இணையும் பிரபலங்கள் யார்? லிஸ்ட் ரெடி!
"நீங்கள் 'தூய சக்தி' என்று கூறிக்கொள்கிறீர்கள். அதை எப்படி நம்புவது? தூய சக்தி உங்கள் திட்டங்கள் பற்றி இதுவரை வாய் திறந்திருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், விஜய்க்கு தன் கட்சி தொண்டர்களின் பெயர்கள்கூட தெரியாது என்றும், கொள்கை தெரியாத, புரிதல் இல்லாத தொண்டர்களால் தவெகவுக்கு அரசியல் எதிர்காலமே இல்லை என்றும் கூறினார். தவெகவில் இருப்பவர்கள் பிற கட்சி பெண்களை அநாகரீகமாகப் பேசுவதாகவும் விமர்சித்தார்.
சமூக வலைத்தளங்களில் "நாளை உன்னை சாகடித்துவிடுவேன், ஆசிட் ஊற்றிவிடுவேன்" போன்ற தரம் தாழ்ந்த கருத்துகளை தவெகவினர் பதிவிடுவதாகக் குறிப்பிட்ட திவ்யா சத்யராஜ், "தன் கட்சி தொண்டர்களையே கட்டுப்படுத்தத் தெரியாத தலைவனால் ஆட்சிக்கு வந்து சட்டம் ஒழுங்கை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
இந்த விமர்சனங்கள் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக - தவெக இடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. தவெக தரப்பில் இதற்கு இதுவரை பதில் எதுவும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: விஜயை சந்தித்ததால் திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை! சேம் சைடு கோல் போடும் பிரவீன்!