சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இன்று தேர்தல் ஊடக அலுவலகத்தை ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் திறந்து வைத்தார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் திரு. சரத்குமார், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் திமுகவின் மும்மொழி கொள்கை எதிர்ப்பு குறித்து அனல் பறக்கும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது குறித்துத் தவெக மற்றும் ஆதவ் அர்ஜூனா முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சரத்குமார் பதிலடி கொடுத்தார். திரைப்படம் லீக் ஆனதை அரசியலாக்கக் கூடாது. மத்திய அரசோ அல்லது தணிக்கை வாரியமோ (CBFC) படத்தைக் கசியவிட்டது என்பது நடக்கச் சாத்தியமில்லாத குற்றச்சாட்டு. தவெக-விற்கு வரும் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கெல்லாம் அரசைச் சாடுவது முறையல்ல. தமிழக வெற்றிக் கழகத்திற்கு என்று ஒரு கொள்கை இருப்பதாக நான் பார்க்கவில்லை. அவர்களின் ஒரே கொள்கை 'குற்றஞ்சாட்டுவது' மட்டும்தான். மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்துச் செய்தியாளர்களைச் சந்திக்கக் கூட அவர்களுக்குத் துணிவில்லை.

தமிழகத்தில் இந்தித் திணிப்பு என்ற பெயரில் திமுக தவறான பிரசாரம் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்:
இந்தியா முழுவதும் பொதுவாகப் பேசப்படும் மொழி இந்தி. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு ஆங்கிலம் எப்படி உதவியதோ, அதேபோன்று இந்தியாவின் பொதுமொழியாக இந்தி உள்ளது. இந்தி தெரிந்தால் இந்தியா முழுவதும் பயணிக்க முடியும். தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த அதிமுகவிடம் பாஜக வலியுறுத்தும். இதில் எந்தத் தவறும் இல்லை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதனை ஏற்றுக்கொள்ளத் தேசியத் தலைமையிடம் நான் பேசுவேன்.
இதையும் படிங்க: நானும் ராதிகாவும் தேர்தலில் நிற்க மாட்டோம்! பாஜகவில் தனக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என சரத்குமார் ஆதங்கம்!
திமுகவின் வாரிசு அரசியலையும், நிர்வாகச் சீர்கேட்டையும் சரத்குமார் கடுமையாகச் சாடினார்: ஜனநாயகக் கட்சி என்று சொல்லும் திமுகவில், ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிதான் வருவார். ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை ஸ்டாலின் முதல்வராக்குவாரா? தங்கள் குடும்பத்தை வளர்ப்பதிலேயே திமுக குறியாக உள்ளது.
தமிழகத்தில் கஞ்சா, மெத் போன்ற போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. ஊழலில் திமுக முதலிடத்தில் உள்ளது. டாஸ்மாக் வருமானத்தை நம்பியே இந்த அரசு இயங்குகிறது."
திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பேச்சுகள் குறித்து உதயநிதி அவர்கள் எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து 'தவழ்ந்து சென்றார்' எனக் கூறுவதை ஏற்க முடியாது. காலில் விழும் கலாச்சாரம் என்பது மரியாதை தொடர்பானது. கீழ்த்தரமாகப் பேசும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜகவில் தனக்கானப் பொறுப்புகள் குறித்து மாநிலத் தலைமையிடம் கடிதம் அளித்துள்ளதாகவும், தேர்தல் முடிவுகளுக்குப் பின் நல்ல அறிவிப்பு வரும் என்றும் குறிப்பிட்ட சரத்குமார், நாளை முதல் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எல்லாரும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிவிட முடியாது! நடிகர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் விளாசல்!