இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) ஒரே நாளில் மூன்று அதிநவீன ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றிகரமான சோதனைகள் இந்தியாவின் தரை, வான் மற்றும் கடல்வழி பாதுகாப்பு அமைப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள சோதனை மையத்தில் இருந்து இரண்டு மேம்பட்ட இடைமறிப்பு ஏவுகணைகள் வெற்றிகரமாக ஏவப்பட்டன. இவை இடைநிலைத்தூர பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் முக்கிய அங்கங்களாகக் கருதப்படுகின்றன. வளிமண்டலத்திற்குள் மற்றும் வளிமண்டலத்திற்கு வெளியே பயணிக்கும் எதிரி ஏவுகணைகளை கண்டறிந்து துல்லியமாக இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டதாக இந்த ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: DRDOவின் ULPGM-V3 ஏவுகணை சோதனை வெற்றி..!! இந்திய பாதுகாப்பில் புதிய மைல்கல்..!!

சோதனையின் போது 2,000 கிலோமீட்டர் முதல் 5,000 கிலோமீட்டர் வரையிலான தூரத்தில் இருந்து வரும் ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது. இலக்குகளை துல்லியமாக அடைந்து செயலிழக்கச் செய்த இந்த சோதனை, நீண்ட தூர மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு எதிராக இந்தியா வலுவான பாதுகாப்பு கவசத்தை உருவாக்கியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, கடற்படை தளத்திலிருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஒன்றும் முதன்முறையாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. கடல் மட்டத்திற்கு மிக அருகில் பறந்து சென்று எதிரி கப்பல்களை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, இந்திய கடற்படையின் தாக்குதல் திறனை மேலும் உயர்த்தும் என கூறப்படுகிறது.
இந்த சாதனையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகரித்து வரும் ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் இந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா தற்போது இடம்பெற்றிருப்பது பெருமைக்குரிய சாதனை என்றும் தெரிவித்துள்ளார்.
மூன்று முக்கிய ஏவுகணை சோதனைகளின் வெற்றி, இந்தியாவின் பாதுகாப்பு தன்னிறைவு மற்றும் தொழில்நுட்ப வலிமையை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இதையும் படிங்க: 7.7% பொருளாதார வளர்ச்சி!! 140 கோடி இந்தியர்களின் லட்சியம் வலுவாகிறது! ராஜ்நாத் சிங் பெருமிதம்!