ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் போதைப்பொருள் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இரு மாநில அரசுகளும் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளன.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு, போதைப் பொருள் ஒழிப்புக்கு ‘ஈகிள்’ என்ற சிறப்பு அதிரடிப் படையை அமைத்துள்ளது. சமீபத்தில் ஹைதராபாத்தில் பி.ஆர்.எஸ். முன்னாள் எம்.எல்.ஏ. ரோஹித் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. புட்டா மகேஷ் யாதவ் உள்ளிட்ட 11 பேர் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்பும் நடிகர்கள் ரகுல் பிரீத் சிங், ராணா டக்குபதி, முமைத் கான் உள்ளிட்டோர் போதை வழக்கில் சிக்கியிருந்தனர்.
ஹைதராபாத் செயற்கை போதைப்பொருட்கள் (சின்தெடிக் டிரக்ஸ்) விநியோகத்தின் முக்கிய மையமாக மாறியுள்ளது. நைஜீரியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வரும் போதைப்பொருட்கள் மும்பை, டில்லி, ஹைதராபாத் வழியாக விநியோகிக்கப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் கலந்துகொள்ளும் விருந்துகளிலும் இவை சப்ளை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நாளை சென்னை வருகிறார் பியூஸ் கோயல்..!! தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்..!!

தெலுங்கானாவில் கடந்த ஆண்டு போதை வழக்குகள் 30 சதவீதம் அதிகரித்துள்ளன. ஹைதராபாத் மனநல மருத்துவமனையில் போதைக்கு அடிமையானோர் வழக்குகள் 108 சதவீதம் உயர்ந்துள்ளன. இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே போதை பயன்பாடு அதிகரித்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் செயற்கை போதைக்கு பதிலாக இயற்கை கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு, கஞ்சா பயிரிடும் இடங்களை அழித்து வருகிறது. கடந்த 2024 ஜூன் முதல் இந்த ஆண்டு தொடக்கம் வரை 900க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 50,000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 120 டன் கஞ்சா அழிக்கப்பட்டது.
இரு மாநிலங்களிலும் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய கடுமையான ஒடுக்குமுறை எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டார்ச் லைட் வேணாம்! உதயசூரியன்லயே நில்லுங்க! கமலிடம் கறார் காட்டும் திமுக! தொகுதி எண்ணிக்கையும் குறைவு!