தி.மு.க.வின் மூத்த அமைச்சரும், வேலூர் மாவட்டத்தில் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் 8 முறை எம்.எல்.ஏ.வுமான துரைமுருகன், வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட தீவிரமாக திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வயது முதிர்வு காரணமாக அவருக்கு 'சீட்' மறுக்கப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்த நிலையில், இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்பாடி தொகுதியில் 8 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற துரைமுருகன், தி.மு.க.வின் மிக மூத்த தலைவர்களில் ஒருவர். நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் அவர், வயது காரணமாக இந்த முறை ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து கட்சியின் இளைஞர் அணியினரிடையே எழுந்திருந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதால், துரைமுருகனுக்கு சீட் மறுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் தற்போது துரைமுருகன் காட்பாடியிலேயே மீண்டும் போட்டியிட விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அவரது மகன், வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் "எனது தந்தை துரைமுருகன் காட்பாடியை விட்டு பிரிய மாட்டார். தொகுதி மக்களோடு மக்களாகவே இருப்பார். மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவார்" என்று பேசி வருகிறார். இது துரைமுருகனின் விருப்பத்தை மறைமுகமாக வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கிராவல் மண் குவாரி ஒப்பந்ததாரர் மாற்றம்! அமைச்சர் தலையீடு காரணமா? தேர்தல் நேர பரபரப்பு!

மேலும், துரைமுருகனின் மருமகள் காட்பாடி தொகுதியில் போட்டியிட உள்ளார் என்ற வதந்திகள் பரவிய நிலையில், அமைச்சர் தானே நேரடியாக களமிறங்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "துரைமுருகன் அவர்களின் செல்வாக்கு காட்பாடியில் மிகப்பெரியது. அவர் மீண்டும் போட்டியிட விரும்புகிறார். ஆனால் இறுதி முடிவை கட்சித் தலைமையே எடுக்கும். உதயநிதி தலைமையிலான இளைஞர் அணியின் விருப்பத்துக்கும், மூத்த தலைவர்களின் அனுபவத்துக்கும் இடையே சமநிலை காணப்படும்" என்றார்.
தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க.வில் சீட் பங்கீடு தொடர்பான பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன. துரைமுருகன் போட்டியிடுவாரா, அவரது மகன் அல்லது மருமகள் களமிறங்குவாரா என்பது கட்சியின் உயர்மட்ட குழு முடிவில் தங்கியுள்ளது. காட்பாடி தொகுதி தி.மு.க.வுக்கு மிக முக்கியமான தொகுதி என்பதால், இந்த முடிவு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: ரிலீஃபான அமைச்சர்கள் குடும்பம்..!! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!! என்ன விஷயம் தெரியுமா..??