இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும், அதன் முழுப் பாதிப்பையும் சாதாரண மக்கள்தான் சுமக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் Rahul Gandhi கடுமையாக எச்சரித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் Narendra Modi தலைமையிலான அரசின் பொருளாதாரக் கொள்கைகளை நேரடியாக குற்றம்சாட்டினார்.
“கடந்த சில நாட்களாகவே நான் தொடர்ந்து சொல்லி வருவது என்னவென்றால், நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய புயல் வீசப்போகிறது. இந்தப் பாதிப்பு பெரிய தொழில் அதிபர்களை அல்ல, சாதாரண மக்களைத் தாக்கும். இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்று ராகுல் கூறினார்.
மேலும், “அதானி மற்றும் அம்பானி போன்ற பெரிய தொழில் அதிபர்களுக்குச் சாதகமாக உருவாக்கப்பட்ட பொருளாதார அமைப்பு நீண்ட காலம் நிலைத்திருக்காது. இது ஒருநாள் முழுமையாகச் சரிந்து விழும். ஆனால் அதன் சுமையை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தான் தாங்க வேண்டியிருக்கும்” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: செல்வப்பெருந்தகை சீட்டுக்கு வேட்டு!! தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான்கு பேர் போட்டி!

உத்தரப் பிரதேச மக்கள்தான் இந்த பொருளாதார தாக்கத்தை அதிகமாக எதிர்கொள்ள நேரிடும் என்றும் ராகுல் குறிப்பிட்டார். “பல ஆண்டுகளாக மக்கள் பார்த்திராத அளவுக்கு கடினமான காலகட்டம் வர இருக்கிறது. வேலைவாய்ப்பு, விவசாயம், சிறு தொழில்கள் ஆகிய துறைகளில் பெரிய பாதிப்பு ஏற்படும்” என்றார்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களையும் ராகுல் விமர்சித்தார். “மக்கள் பாதிக்காத வகையில் பொருளாதார நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, அவர் வெளிநாட்டு பயணங்களைத் தவிர்க்குமாறு மக்களிடம் அறிவுறுத்துகிறார். ஆனால் அவர் தொடர்ந்து உலக நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார்” என்று கூறினார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின் பொருளாதார நிலை, வேலைவாய்ப்பு குறைவு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் மீண்டும் அரசியல் மையமாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: தவெக தரும் அமைச்சர் பதவி யாருக்கு? தமிழக காங்., எம்.எல்.ஏ-க்கள் குஸ்தி சண்டை!!