சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு துரோகம் செய்து சென்றவர்களின் பழைய கதைகளை இனி பேச வேண்டாம் என்றும், அதிமுக புத்துணர்வுடன் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும் என்றும் நம்பிக்கை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்தின் போது, முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் பரஞ்சோதி, குமார் உள்ளிட்டோர் குறித்து சில நிர்வாகிகள் பேசியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சசிகலா, TTV தினகரன் ரீ-என்ட்ரி..? WAIT & SEE..! அரசியல் களத்தை குலுக்கிய கே.சி. கருப்பண்ணன்..!!
அதற்கு பதிலளித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "கட்சிக்கு துரோகம் செய்து வேறு கட்சிக்குச் சென்றவர்கள் குறித்து இனி யாரும் பேச வேண்டாம். அந்தப் பழைய கதைகளை எல்லாம் விட்டுவிடுங்கள். வரவிருக்கும் நாட்களில் அதிமுகவை எப்படி மேலும் வலுப்படுத்துவது என்பதில் தான் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், "வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். ஒற்றுமையுடன் செயல்பட்டால் அதிமுக புத்துணர்வுடன் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, கட்சித் தொண்டர்கள் யாரும் மனச்சோர்வு அடையாமல் தொடர்ந்து கட்சிப் பணியாற்ற வேண்டும்" என்று நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணி டிக் அடித்த 21 பேர்... அதிமுக தோல்விக்கு காரணம் இதுவே... உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரமுகர்...!